ரவுடிகளுக்கு ஆதரவு கொடுப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி; வானதி பேட்டி
ரவுடிகளுக்கு ஆதரவு கொடுப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி; வானதி பேட்டி
ADDED : செப் 19, 2025 10:17 PM

கோவை; ''திராவிட மாடல் ஆட்சி என்பது, ரவுடிகளுக்கு ஆதரவு கொடுக்கக்கூடிய ஆட்சி,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறினார்.
கோவையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., குறைப்பால், தமிழகத்தை போன்ற உற்பத்தி துறையில் முன்னணி வகிக்கும் மாநிலங்கள் நல்ல பலன் பெற்றுள்ளன. சராசரி மக்கள் அதிகம் பயன்படுத்தும் உணவு பொருளில் இருந்து அனைத்து பொருட்களுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளது. இது, வியாபாரத்தை அதிகரிக்கும்; மக்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும்.
வரி சீர்திருத்தத்தில் பெண்களுக்கு ஏராளமான சலுகைகள் கிடைத்துள்ளன. வியாபாரிகள் சங்கம், தொழில் அமைப்புகள், நுகர்வோர் சங்கத்தினர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
சமூக நீதி மாடல் என சொல்லும் திராவிட மாடல் அரசில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான குற்றங்கள், ஆணவப்படுகொலைகள் என, தமிழகம் முழுக்க சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
திராவிட மாடலுக்கும், ரவுடிகள் ராஜ்ஜியத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. திராவிட மாடல் என்பது ரவுடிகளுக்கும் ஆதரவு கொடுக்கக்கூடிய ஆட்சி.
த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு, நிறைய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. கூட்டத்தை கூட்டி விட்டால், என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற மனப்பான்மை யாருக்கும் வரக்கூடாது.
அது, பொது ஒழுங்குக்கு சரியானதல்ல. அரசியல் கட்சி தலைவர்களும், கட்சிகளும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு, வானதி சீனிவாசன் கூறினார்.