ரூ.25,000 லஞ்சம் வாங்கிய மருந்து கட்டுப்பாட்டுத் துறை பொறுப்பு அதிகாரி கைது
ரூ.25,000 லஞ்சம் வாங்கிய மருந்து கட்டுப்பாட்டுத் துறை பொறுப்பு அதிகாரி கைது
UPDATED : ஜூலை 22, 2025 08:16 PM
ADDED : ஜூலை 22, 2025 05:38 AM

சென்னை: வேலுார் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்; சோப்பு நிறுவன உரிமையாளர். இவர், தன் நிறுவனத்தில் ரசாயண பொருட்கள் இல்லாமல், இயற்கை பொருட்கள் வாயிலாக சோப்பு தயாரிக்க, சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் செயல்படும், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் விண்ணப்பித்துள்ளார்.
இதை பரிசீலனை செய்து, மேல் நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்க, இணை இயக்குநர் கார்த்திகேயன், ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். மேலும், 'முன் பணமாக, 25,000 ரூபாய் கொடுத்தால், உங்கள் மனு மீதான கோப்பு பரிசீலனை செய்யப்படும்' என, கூறியுள்ளார்.
இது குறித்து, சரவணன், சென்னை ஆலந்துாரில் உள்ள, லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கார்த்திகேயன் நடவடிக்கைகளை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று, தன் அலுவலகத்தில், சரவணனிடம் இருந்து 25,000 ரூபாயை, கார்த்திகேயன் வாங்கிய போது, டி.எஸ்.பி., பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.