ADDED : ஆக 14, 2025 03:35 AM

சென்னை:கடந்த, 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த, போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் முகமது முனவர், இலங்கையில் இருந்து, சென்னை வந்த போது கைது செய்யப்பட்டார்.
சென்னை, கோயம்பேடு, ஆம்னி பஸ் நிறுத்தம் அருகே, கடந்த 2012ம் ஆண்டு, என்.சி.பி., எனப்படும், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, ரகசிய தகவல் அடிப்படையில், மதுரை செல்ல இருந்த தம்பதி ரவிக்குமார், மாலினி ஆகியோரின் உடைமைகளை, சோதனை செய்தனர். அதில், 33 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர் விசாரணையில், இலங்கையை சேர்ந்த, போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் முகமது முனவர், 70, மதுரையைச் சேர்ந்த ஒருவரிடம் போதைப் பொருளை ஒப்படைக்க கூறி, அதற்கு கமிஷன் தொகையாக, 50,000 ரூபாய் கொடுத்தது தெரிய வந்தது.
இந்த வழக்கில், கடந்த, 2016ம் ஆண்டு ரவிக்குமாருக்கு 16 ஆண்டுகள், மாலினிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. முகமது முனவரை, என்.சி.பி., அதிகாரிகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இருந்தனர்.
கடந்த 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர், நேற்று முன்தினம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், இலங்கையில் இருந்து சென்னை வந்தார்.
அவரை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பிடித்து, என்.சி.பி., அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.