ADDED : டிச 09, 2024 04:22 AM
சென்னை : 'மெத் ஆம் பெட்டமைன்' போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய காவலர்களிடம், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில், குற்றப்பிரிவு காவலராக பணிபுரிந்தவர் ஜேம்ஸ்,35. இவரது கூட்டாளி சுரேந்திரநாத், 39. இருவரும், மெத் ஆம் பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில், வடபழனி காவல் நிலைய தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில், சென்னை அயப்பாக்கத்தில் உள்ள என்.சி.பி., எனப்படும், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் காவலர்களாக பணிபுரிந்த ஆனந்தன், 35, சபீர்,34 மற்றும் அயனாவரம் காவலர் பரணி,32 ஆகியோர் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் மூவரையும் கைது செய்தனர். ஐவரில், ஜேம்ஸ், சுரேந்திரநாத் ஆகியோரை போலீசார் நான்கு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இருவரும் ஓரின சேர்க்கையாளர்கள் என்றும், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தங்கியுள்ள நைஜீரிய கும்பலிடம் இருந்து, மெத்ஆம்பெட்டமைன் வாங்கி வந்து சென்னையில் விற்றதாகவும் ஜேம்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சுரேந்திரநாத் தவிர காவலர்கள் நால்வரும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், போதை கடத்தல் கும்பலிடம் மெத் ஆம்பெட்டமைன் வாங்கிய பிறகு, அவர்களிடம் தாங்கள் காவலர்கள் என்பதை கூறி, அவர்களை மிரட்டி பணம் பறித்த விபரத்தையும் தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, காவலர்களின் பின்னணியில் செயல்பட்ட நைஜீரிய கும்பல் குறித்தும், தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.