ADDED : மே 30, 2025 12:35 AM
சென்னை:போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும், நைஜீரியா மற்றும் இலங்கையை சேர்ந்த 12 பேரை, என்.சி.பி., எனப்படும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழகம் போதைப் பொருள் கடத்தலுக்கான, நுழைவாயிலாக மாறி வருகிறது. ஆந்திர மாநில கஞ்சாவுக்கு கிராக்கி அதிகம் என்பதால், அதிக அளவில் இலங்கைக்கு கடத்தப்படுகிறது.
இதை முறியடிக்கும் பணியில், மத்திய, மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, என்.சி.பி., எனப்படும் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை, நைஜீரியா, பொலிவியா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்தோர் இயக்கி வருகின்றனர்.
இந்நாடுகளை சேர்ந்த, 18 பேரை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளோம். மேலும், கடத்தல் கும்பலை சேர்ந்த, இலங்கை மற்றும் நைஜீரியாவை சேர்ந்த, 12 பேரை தீவிரமாக தேடி வருகிறோம்.
வெளிநாடுகளை சேர்ந்த, போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ஆம் பெட்டமைன், கோகைன், மெத் ஆம்பெட்டமைன், சைலோசைபின் எனப்படும் போதை காளான் உள்ளிட்ட சிந்தட்டிக் போதைப்பொருட்கள் கடத்தலில், அதிகம் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.