ADDED : ஏப் 08, 2025 06:38 AM
சென்னை: தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பல், தென்காசியில் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, என்.சி.பி., எனப்படும், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அங்கு முகாமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, என்.சி.பி., அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்திற்கு, ஒடிசா, ஆந்திராவில் இருந்து உயர் ரக கஞ்சா கடத்தி வரப்படுகிறது. மணிப்பூரில் இருந்து காரில், மெத்ஆம்பெட்டமைன் கடத்தி வரப்படுகிறது.
தற்போது, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும், மெத் ஆம்பெட்டமைன் கடத்தப்படுவது, எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. எங்களின் தொடர் கண்காணிப்பில், தமிழகம் மற்றும் கேரள மாநில போதை பொருள் கடத்தல்காரர்கள், தென்காசி மாவட்டத்திற்கு அதிகம் வந்து சென்றது தெரியவந்துள்ளது.
அவர்கள், தென்காசி மாவட்டத்தின் சில பகுதிகளை, போதை பொருட்களை கைமாற்றும் இடமாக மாற்றி வருகின்றனர்.
எங்களின் பட்டியலில் உள்ள, போதை பொருள் கடத்தல்காரர்களின் மொபைல் போன் சிக்னல்கள், தென்காசியில் பல முறை பதிவாகி உள்ளன. அவர்களில், சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களும் உள்ளனர். இதனால், அம்மாவட்டத்தை மையப்படுத்தி, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.