ADDED : மார் 14, 2024 12:33 AM

சென்னை:விளைச்சல் அதிகரிப்பால், முருங்கைக்காய் விலை தொடர்ந்து சரிந்து கிலோ, 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
திண்டுக்கல், தேனி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முருங்கைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. இது சென்னை கோயம்பேடு சந்தைக்கு அட்டை பெட்டிகள், சணல் பைகளில் எடுத்து வரப்படுகிறது.
ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் முருங்கைக்காய் வரத்து உள்ளது. தற்போது, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் முருங்கைக்காய் சீசன் களைகட்டுகிறது. இதன் எதிரொலியாக கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்து உள்ளது.
நாள்தோறும் 15க்கும் மேற்பட்ட லாரிகளில், டன் கணக்கில் முருங்கைக்காய் வருவதால், அதன் விலையும் குறைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, ஒரு கிலோ, 100 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முருங்கைக்காய் விலை சரிந்துள்ளதால், ஹோட்டல்கள், கேன்டீன்களில் அவற்றை வைத்து சாம்பார், கூட்டு என பலவகை உணவுகள் தயாரித்து தாராளமாக பறிமாறப்படுகிறது.

