குடிபோதையில் கார் ஓட்டி விபத்து; வயதான தம்பதி பரிதாப பலி
குடிபோதையில் கார் ஓட்டி விபத்து; வயதான தம்பதி பரிதாப பலி
ADDED : நவ 23, 2024 07:42 AM

பாலக்காடு : பாலக்காடு அருகே, குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியதில், இரு முதியவர்கள் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், எலவஞ்சேரியை சேர்ந்தவர் பிரேம்நாத், 45. இவர், நேற்று மதியம் 2:10 மணிக்கு, புது நகரத்தில் இருந்து கொடுவாயூர் நோக்கி காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றார்.
கொடுவாயூர் அருகே, சாலையோரம் நின்று கொண்டிருந்த, பாலக்காடு மாவட்டம், நெம்மாரா வண்டாழி தெக்கேகாடு பகுதியைச் சேர்ந்த சாமி, 65, அவரது மனைவி ஜானு, 60, ஆகியோர் மீது, கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில், 50 அடிக்கு துாக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த, புதுநகரம் போலீசார், உடல்களை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அப்பகுதியில் உள்ள, சி.சி.டி.வி., கேமரா பதிவு காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்திய போலீசார், தொடர் விசாரணையில் ஈடுபட்டு, கார் ஓட்டி சென்ற பிரேம்நாத்தை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பிரேம்நாத் அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில், காரை ஓட்டியுள்ளார். அதிவேகமாக கார் ஓட்டியதுடன், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளார்.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறோம்,' என்றனர்.