இ.சி.ஆர்., பெண்களிடம் தகராறு செய்திக்கான பெண்கள் பேட்டி
இ.சி.ஆர்., பெண்களிடம் தகராறு செய்திக்கான பெண்கள் பேட்டி
ADDED : ஜன 30, 2025 01:22 AM

இந்த பேட்டி கொடுத்த பெண்களில், நடிகை ஒருவரை தவிர, மற்ற யாரும் புகைப்படம் தரவில்லை. புகைப்படம் தந்தால், தங்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமோ என, அவர்கள் அச்சப்பட்டனர். அதுவே, இச்செய்திக்கு சாட்சி!
எஸ்.ஓ.எஸ்., சரி பார்க்க வேண்டும்
மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில், பெண்களுக்கு நிறையவே பாதுகாப்பு இருக்கிறது. குறிப்பாக சென்னை போலீஸ், பெண்களின் பாதுகாப்புக்கு துணை நிற்கின்றனர்.
ஊபர், ஓலா போன்ற கார், ஆட்டோ மற்றும் பைக் டாக்ஸி சேவையில் செல்லும் போது, எஸ்.ஓ.எஸ்., சேவை - அவசர கால அழைப்பு - சரியாக செயல்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும். டில்லி போன்ற நகரில் அது சரியாக செயல்படவில்லை.
- கோமல்சர்மா, 28,
நடிகை, வடபழனி
காவல் துறை, சட்டத்தின் மீது உள்ள மரியாதை மற்றும் பயம் என்பது ஆளும் கட்சியைச் சேர்ந்தோருக்கு துளியும் இல்லை. அதனால் தான், சென்னை நகரில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட்சியின் கைப்பாவையாக இல்லாமல் மாவட்ட கலெக்டர், காவல் துறை எப்போது தன்னிச்சையாக செயல்பட முடியுமோ, அப்போதுதான் அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.
- த.ஸ்ரீவித்யா, 29,
ஐ.டி., ஊழியர், ஆதம்பாக்கம்.
ஊருக்குள் 'டாஸ்மாக்'
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்க வேண்டிய 'டாஸ்மாக்' கடை, வீட்டிற்கு அருகில் எப்போது வந்ததோ, அப்போதே பிரச்னை அதிகமாகிவிட்டது. இதற்கு முழு காரணம் அரசுதான். குறிப்பாக இந்த ஆட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மோசமாக உள்ளது.
- எம்.மானசா, 24,
தனியார் நிறுவனம் ஊழியர், நங்கநல்லுார்
விழிப்புணர்வு தேவை
இரவில் 10:00 மணிக்கு மேல், முக்கிய சந்திப்புகளில் போதை ஆசாமிகள் திரிவதால், பாதுகாப்பற்ற சூழல் உருவாகிறது. தெருவிளக்கு இல்லாதது, ஆள்நடமாட்டம் குறைவால், பயந்தபடி தான் சாலையை கடக்க வேண்டியுள்ளது. காவல் துறையின் உதவிக்கான செயலிகள் குறித்து பல பெண்களுக்கு தெரிவதில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
பி.அம்மு, 48,
செவிலியர், திருவொற்றியூர்
சட்டம் வலுவான தேவை
'ரிமோட் ஏரியா' எனப்படும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில், 'சிசிடிவி' மற்றும் போலீஸ் ரோந்து செல்வதை அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில், குற்றவாளிகள் தப்பிக்க முடியாதபடி, சட்டங்கள் வலிமையாக்க வேண்டும்.
ரூபிணி, 46,
கல்லுாரி விரிவுரையாளர், வேப்பம்பட்டு.
பொதுவாக இரவு 10:00 மணிக்கு மேல், முக்கிய சாலைகளில், முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தினால், பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே 'டாஸ்மாக்' கடை உள்ளது. அங்கு, இரவு 8:00 மணிக்கு மேல் போதை ஆசாமிகள் கூட்டமாக நிற்கின்றனர். இதனால், அங்கு போலீசாரை நிறுத்தினால், பெண்கள் பாதுகாப்பாக உணருவார்கள்.
- மீனா, செம்பாக்கம்.
இடம், சூழல் பொறுத்துதான், பெண்களுக்கு எதிரான அத்துமீறல் நடக்கிறது. சாலையில் மின் விளக்கு எரியவில்லை என்றால், உடனே சரி செய்ய வேண்டும். அனைத்து சாலைகளிலும் அவசர பாதுகாப்பு எண்கள், 'சிசிடிவி' மற்றும் ரோந்து போலீசார் போன்ற பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எது நடந்தாலும், பெண்கள் துணிந்து வெளியே சொல்ல முன்வர வேண்டும்.
-வீ.லதா, 42,
சமூக ஆர்வலர், ஆவடி
'ஊபர், ஓலா, ராபிடோ' ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர், போதையில் இருக்கின்றனர். அதனால், வாகனத்தை பகிர்ந்து கொள்ளும் முறையை பயன்படுத்துகிறேன். இது பாதுகாப்பானதாக உணர்கிறேன். தெரியாத நபர்களுடன் பயணம் செய்வதற்கு முன், வாகன எண் அல்லது நேரலை இருப்பிடத்தை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்வது போன்ற சில பாதுகாப்பு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.
- சுபஸ்ரீ, 32,
ஐ.டி., ஊழியர், குரோம்பேட்டை.
நம்பிக்கை இல்லை
வெளியூரிலிருந்து இங்கு வந்து ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறோம். இரவில் பணி முடித்து பைக்கில் வீட்டுக்கு செல்லும்போது, கடைகளில் தனியாக நிற்கும்போது, நோட்டமிட்டு பின் தொடர்வது, பேச்சு கொடுப்பது, ஆபாசமாக பேசுவது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த இடத்தில் போலீஸ் வந்தால், அந்த நபரை தலையில் தட்டி அழைத்து செல்வர். எங்களிடம் எந்த கேள்வியும் கேட்பதில்லை. புகார் கொடுக்கவும் கூறுவதில்லை. அடுத்த சில நிமிடத்தில், அந்த நபரிடம் பணம் பெற்று கொண்டு துரத்தி விடுவர். இதனால், போலீஸ் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது.
- ஹரிணி, 25,
சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆர்.,
பாதுகாப்பு கேள்விக்குறி
இ.சி.ஆர்., நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், பனையூர் போன்ற கடற்கரை பகுதியில் நடமாடும் போதை நபர்கள், ஆண் துணை இல்லாமல் வரும் பெண்களுக்கு, பல்வேறு தொந்தரவுகள் கொடுக்கின்றனர். மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை போல், இங்குள்ள கடற்கரைகளில் போலீஸ் பாதுகாப்பு இல்லை. இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் நள்ளிரவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். புகார் அளித்தும் உடனே வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்யாத, போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- திவ்யா, 32, நீலாங்கரை
நம்பிக்கை இல்லாத போலீஸ்
ஏரியாவை பொறுத்து!
சென்னையில் பெண்களின் பாதுகாப்பு என்பது அவரவர் ஏரியாவை பொறுத்தே அமைகிறது. நான் பணிபுரியும் பெரம்பூரில், பெண்களுக்கு பாதுகாப்பு என்பது போதிய அளவு இல்லை. இரவு நேரத்தில் தனியே நடந்து செல்ல முடியாது. ஆனால் அம்பத்துாரில் அப்படியில்லை. நள்ளிரவு நேரத்தில்கூட நான் தனியாக வீட்டுக்கு சென்றுள்ளேன்.
- சங்கீதா, 45,
தனியார் பள்ளி ஆசிரியை, அம்பத்துார்

