கதிர் ஆனந்த் கல்லுாரியில் சோதனைக்கு ஒத்துழைப்பு இல்லை ஐகோர்ட்டில் ஈ.டி., புகார்
கதிர் ஆனந்த் கல்லுாரியில் சோதனைக்கு ஒத்துழைப்பு இல்லை ஐகோர்ட்டில் ஈ.டி., புகார்
ADDED : ஜன 09, 2025 10:57 PM
சென்னை:தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லுாரியில், 'சர்வர்' அறைக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு விட்டது என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வேலுார் மாவட்டம், காட்பாடியில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரி உள்ளது. தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லுாரியில், கடந்த 3ம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின், கல்லுாரியில் உள்ள, சர்வர் அறைக்கு, சீல் வைக்கப்பட்டது.
சீலை அகற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்லுாரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
முடக்கம்
அப்போது, கல்லுாரி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதாடியதாவது:
கல்லுாரியில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தேர்வு துவங்கி நடந்து வருகிறது. சர்வர் அறைக்கு சீல் வைக்கப்பட்டதால், தேர்வு நடத்துவதில் நடைமுறை சிக்கல் எழுந்துள்ளது. கணினிகள், 'சிசிடிவி கேமரா'க்கள் செயல்படாமல் போய் உள்ளன. கல்லுாரியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன.
சோதனையின்போது, கல்லுாரி மற்றும் அதன் ஊழியர்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அமலாக்கத் துறை எடுத்து சென்ற மின்னணு ஆவணங்களில், மாணவர்கள் தொடர்புடைய பல தகவல்கள் உள்ளன. அவற்றின் நகல்களை வழங்க கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் வாதாடியதாவது:
சோதனைக்கு சென்றபோது, கல்லுாரி நிர்வாகம், ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை.கல்லுாரி சர்வர் அறை சாவியை வழங்க மறுத்து விட்டனர். கார்பென்டர் உதவியுடன் அறை திறக்கப்பட்டது. சோதனையில், 2.74 கோடிக்கு மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பணிகள் பாதிக்கும்
கல்லுாரி கணினிகளை ஆய்வு செய்ய ஒத்துழைக்காததால், சர்வர் அறைக்கு சீல் வைக்கப்பட்டது. பின், சீல் அகற்றப்பட்டு, கல்லுாரியின் வரவு-, செலவு கணக்கு விபரங்கள் சார்ந்த, 'ஹார்டு டிஸ்க்' மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. நிர்வாக பணிகள் பாதிக்கும் அளவுக்கு கல்லுாரி சார்ந்த, 'சாப்ட்வேர்' உள்ளிட்டவை முடக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறுவது ஏற்புடையதல்ல; முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அமலாக்கத் துறை சட்ட விதிகள்படி, அத்துறை அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும்படி கல்லுாரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்களைக் கேட்டதற்கான கோரிக்கையையும் நிராகரித்த நீதிபதிகள், சீல் அகற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

