ADDED : ஏப் 17, 2025 01:23 AM

சென்னை:சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக, அமைச்சர் நேரு தம்பி ரவிச்சந்திரனிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அமைச்சர் நேருவின் சகோதரர்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், நேருவின் மகனும் தி.மு.க., - எம்.பி.,யுமான அருண் ஆகியோர், காற்றாலைகள், அரிசி ஆலை மற்றும் கட்டுமான தொழில் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
இதில் ரவிச்சந்திரன், 'ட்ரூடோம் இ.பி.சி., இந்தியா' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் வாயிலாக, சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், 2013ல் 30 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.
இந்தத் தொகையை, காற்றாலை நிறுவனத்தில் முதலீடு செய்யாமல், கட்டுமான தொழில் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தி உள்ளார்.
இதனால், கடன் வழங்கிய வங்கிக்கு, 22.48 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வங்கி அளித்த புகாரின்படி, ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினர்கள், நிறுவன ஊழியர்கள் மீது, சி.பி.ஐ., 2021ல் வழக்கு பதிவு செய்தது.
அதன் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, சென்னை, திருச்சி, கோவை, பெரம்பலுார் உள்ளிட்ட, 15 இடங்களில் சமீபத்தில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
மேலும், சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, ரவிச்சந்திரனிடம் இரண்டு முறை விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.
மூன்றாவது முறையாக விசாரணைக்கு ஆஜராக, 'சம்மன்' அனுப்பினர். ஆனால், உடல்நிலை பாதிப்பு காரணமாக, ரவிச்சந்திரன் ஆஜராகவில்லை.
இந்நிலையில் நேற்று அவர், சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் காலை 11:00 மணியளவில் ஆஜரானார்.
அவரிடம், ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது. சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.