ADDED : ஜூலை 11, 2026 06:24 AM

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, சென்னையில் இரண்டு இடங்கள் உட்பட, தமிழகத்தில் ஐந்து இடங்களில் நேற்று, ஈ.டி., எனப்படும், அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் நசீர். 'ஷூ' கடை நடத்தி வரும் இவர் மீது, சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஆறு பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று காலை, 8:00 மணி முதல் அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல, 'டிராவல்ஸ்' நிறுவனம் நடத்தி வரும் ராயப்பேட்டையை சேர்ந்த ஆஸ்மி என்பவரின் வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொக்கிஷம்காரன்பட்டியை சேர்ந்த பாக்கியராஜ், எண்ணெய் ஆலை நடத்தி வருகிறார். அவரது வீடு மற்றும் எண்ணெய் கடையிலும் சோதனை நடந்தது.
அதே மாவட்டத்தை சேர்ந்தவர் திருக்குமரன்; இவர் வெல்டிங் பட்டறை மற்றும் இறால் பண்ணை நடத்தி வருகிறார்.
அவரது வீடு, வெல்டிங் பட்டறை மற்றும் டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த பயாஸ் வீட்டிலும், அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, ஐந்து இடங்களில், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக நேற்று சோதனை நடைபெற்றது.
