கட்டுமானம், ரசாயன நிறுவன அதிபர்கள் வீடுகளில் ஈ.டி., சோதனை
கட்டுமானம், ரசாயன நிறுவன அதிபர்கள் வீடுகளில் ஈ.டி., சோதனை
ADDED : மார் 03, 2024 04:21 AM
சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில், சென்னையில் கட்டுமான நிறுவனங்கள், ரசாயன நிறுவன அதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னை பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிய போது, அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகளுக்கு, 50.6 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில், கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில், கடந்த மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. அப்பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் மட்டுமின்றி, மதுபான வியாபாரத்துக்கும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தியது தெரிய வந்தது.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனங்கள், கிரானைட் கல் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் ரசாயன நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
அதன்படி, திருவான்மியூர் லட்சுமிபுரத்தில் உள்ள கட்டுமான நிறுவன உரிமையாளர் நவீன் வீடு, அலுவலகத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கோட்டூர்புரத்தில் கிரானைட் நிறுவனத்தின் உரிமையாளர் விஷ்ணு வீடு மற்றும் அலுவலகம், தி.நகரில் ரசாயன நிறுவன நடத்தி வரும் அண்ணாநகரை சேர்ந்த சுப்பிரமணியம் வீடு, அலுவலகம் உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டது.

