அமைச்சர் நேரு துறையில் பணி நியமனத்தில் ஊழல் வழக்கு பதிவு செய்யும்படி டி.ஜி.பி.,க்கு ஈ.டி., கடிதம்
அமைச்சர் நேரு துறையில் பணி நியமனத்தில் ஊழல் வழக்கு பதிவு செய்யும்படி டி.ஜி.பி.,க்கு ஈ.டி., கடிதம்
ADDED : அக் 30, 2025 01:39 AM
சென்னை:'தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து, அதன் நகலை எங்களுக்கு அனுப்புங்கள்' என, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு உள்ளார். இவரது தம்பி ரவிச்சந்திரன். இவர், 30 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த ஏப்ரலில் சென்னை, திருச்சி மற்றும் கோவையில், ரவிச்சந்திரன் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது, நேரு அமைச்சராக உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேர்வில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழக பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
வங்கி கடன் மோசடி தொடர்பாக நாங்கள் நடத்திய சோதனையில், பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை ஆய்வு செய்த போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்தில், மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன.
பணியாளர் மற்றும் அதிகாரிகள் நியமனத்திற்கு, அவர்களின் பதவியை பொறுத்து, நபர் ஒருவருக்கு, 25 - 35 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளோம். இந்த ஊழல் தொடர்பாக, 232 பக்கங்களில் விரிவான அறிக்கையை உங்களுக்கு அனுப்பி உள்ளோம்.
பணி நியமனம் தொடர்பாக, ஹவாலா பணப் பரிமாற்றம் நடந்ததற்கான புகைப்படங்கள், ரொக்கம் பெற்றதற்கான சான்றுகள், ஆவணங்கள், அதிகாரமிக்க நபர்களின் மொபைல் போனில் இருந்த வாட்ஸாப் தகவல்கள் போன்றவற்றை சேகரித்து, அனுப்பி வைத்துள்ளோம்.
அவற்றை ஆய்வு செய்தில், இந்த ஊழலில் சில அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், உதவியாளர்கள் ஈடுபட்டிருப்பது உறுதியாகி உள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு, அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேர்வு முடிவு வெளியிடும் முன்னரே, பணம் வசூலிக்கப்பட்ட நபர்களுக்கு தகவல்கள் கசிய விடப்பட்டு உள்ளன; லஞ்சம் வசூலித்து பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
லஞ்சம் கொடுத்தவர்களுக்காக, ஆட்கள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. லஞ்ச பணம் வங்கிகள் வாயிலாகவும், சில நிறுவனங்களின் பெயர்களிலும் வசூலிக்கப்பட்டு உள்ளன. இந்த ஊழலால், ஏராளமான தகுதி வாய்ந்த இளைஞர்கள் தங்களின் எதிர் காலத்தை இழந்துள்ளனர். எனவே, இந்த ஊழல் குறித்து சட்ட ரீதியாக விசாரிக்க வேண்டும்.
தேர்வு முடிவு தொடர்பான ரகசிய தகவல்கள், யாரால், யார் யாருக்கு முன்கூட்டியே கசிய விடப்பட்டன; லஞ்சம் கொடுத்த நபர்களுக்காக, தேர்வு முடிவுகளை எப்படி மாற்றினர்; இந்த ஊழலில் அண்ணா பல்கலை அதிகாரிகள் யார் யார் ஈடுபட்டனர்; அவர்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார்; எத்தனை பேரின் மதிப்பெண்கள் மாற்றப்பட்டன; தகுதியான, திறமையான நபர்கள் எத்தனை பேர் நிராகரிக்கப்பட்டனர்; ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் யார்; இடைத்தரர்களாகச் செயல்பட்ட நபர்கள் யார்? அவர்கள் வாயிலாக வசூலிக்கப்பட்ட தொகை யாரிடம் வழங்கப்பட்டது என விசாரிக்க வேண்டும்.
இது குறித்து விசாரித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அதன் நகலை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போது தான் எங்களால் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

