ADDED : ஆக 02, 2025 02:02 AM

சென்னை:பிரபல கல்வியாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவி, 87, மாரடைப்பால் காலமானார்.
தொழிற்சங்கவாதியும், சிந்தனையாளருமான வெங்கல் சக்கரையின் மகள் வழி பேத்தி வசந்திதேவி. இவர், 1938ல் திண்டுக்கல்லில் பிறந்தார். இவருடைய தந்தை வழக்கறிஞர் பி.வி.தாஸ், திண்டுக்கல் நகராட்சித் தலைவராகவும் இருந்தார்.
ராணி மேரி கல்லுாரி பேராசிரியையான வசந்திதேவி, 1987ல் தமிழகத்தில் நடந்த கல்லுாரி ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர். 1988- - 90 வரை கும்பகோணம் அரசு மகளிர் கல்லுாரி முதல்வராக பணியாற்றினார்.
கடந்த 1992 முதல் 1998 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தராக இருந்தார். அப்போது, அவர் கொண்டு வந்த முக்கியமான திட்டங்களில் ஒன்று, கிராமப்புற பெண்களுக்கு சைக்கிள் பயிற்சி அளிக்கும் திட்டம். பின், தமிழக மாநில மகளிர் ஆணைய தலைவராகவும் இருந்தார். 2016 சட்டசபை தேர்தலில், மக்கள் நலக்கூட்டணி சார்பில், ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து, வி.சி., கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த வசந்திதேவிக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் வந்து பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மறைந்த வசந்திதேவிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர் தன் உடலை தானம் செய்துள்ளார். இறுதிச் சடங்கு செய்த பின், அவரது உடல் இன்று காலை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப் படுகிறது.