இல்லாத அதிகாரத்தை எடுத்து கொண்டு தேர்தல் கமிஷன் விசாரிக்க முடியாது * ஐகோர்ட்டில் பழனிசாமி வாதம்
இல்லாத அதிகாரத்தை எடுத்து கொண்டு தேர்தல் கமிஷன் விசாரிக்க முடியாது * ஐகோர்ட்டில் பழனிசாமி வாதம்
ADDED : பிப் 06, 2025 09:51 PM
சென்னை:'இல்லாத அதிகாரத்தை எடுத்து கொண்டு, தேர்தல் கமிஷன், உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடியாது' என பழனிசாமி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
அ.தி.மு.க., பொதுச் செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது; கட்சி விதிகளில் திருத்தம் செய்தது செல்லாது என, தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,க்கள் கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத், வா.புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், கே.சி.பழனிசாமி உள்ளிட்டோரின் மனுக்களை, தேர்தல் கமிஷன் விசாரிக்க தடை கேட்டு, உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனுக்கள் தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், உள்கட்சி விவகாரம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்குகள், நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், புகழேந்தி ஆகியோர் தரப்பில் தடையை நீக்க கோரி, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அப்போது, ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி தரப்பில், 'தனிப்பட்ட அதிகாரம் கொண்ட தேர்தல் கமிஷன் விசாரணைக்கு தடை கோர முடியாது. மனுக்கள் மீது, தேர்தல் கமிஷன் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், முன்கூட்டியே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, வாதிடப்பட்டது.
பழனிசாமி தரப்பில், 'உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், தேர்தல் கமிஷன் அளித்த நோட்டீசுக்கு பதில் அளிக்கப்பட்டது. மற்றவர்கள் மனுக்களை விசாரிக்க ஆட்சேபம் தெரிவிக்கப் பட்டது. உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாக, உரிமையியல் வழக்குகள் உள்ள நிலையில், இல்லாத நீதிமன்ற அதிகாரத்தை எடுத்து கொண்டு தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த முடியாது. அதனால், மற்றவர்கள் அளித்த மனு மீது விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது' என, வாதிடப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் கமிஷன் தரப்பு வாதத்துக்காக, விசாரணை நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.