UPDATED : ஏப் 19, 2024 12:39 PM
ADDED : ஏப் 19, 2024 05:15 AM

சென்னை: தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் இன்று(ஏப்.,19) காலை 7:00 மணிக்கு லோக்சபா முதல்கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது. மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. தேர்தலில், 76 பெண்கள் உட்பட 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தல் நடக்கும் மாநிலங்கள்
தமிழகம் - 39 தொகுதிகள், ராஜஸ்தான் - 12 தொகுதிகள், உ.பி- 8 தொகுதிகள், மத்திய பிரதேசம் - 6 தொகுதிகள், அசாம்- 5 தொகுதிகள், மேற்குவங்கம்- 3 தொகுதிகள், பீஹார்- 4 தொகுதிகள், மஹாராஷ்டிரா- 5 தொகுதிகள், உத்தரகண்ட்- 5 தொகுதிகள், மேற்குவங்கம் - 3 தொகுதிகள், அருணாச்சல், மேகாலயா, மணிப்பூர் - தலா 2 தொகுதிகள், புதுச்சேரி, சத்தீஸ்கர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவு, ஜம்மு-காஷ்மீர் - தலா 1 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.
தேர்தல் பணிகளை கண்காணிக்க, 39 பொது பார்வையாளர்கள், 20 போலீஸ் பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள், ஒரு சிறப்பு செலவின பார்வையாளர், தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டளிப்பதற்காக, 68,321 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வாக்காளர்கள் ஓட்டளிக்க, 1.58 லட்சம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 81,157 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 86,858 'விவிபேட்' இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு, 325 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 326 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 346 விவிபேட் இயந்திரங்கள் தயாராக உள்ளன. மாநிலம் முழுதும், 8,231 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும், 44,801 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவை கண்காணிக்க, 'வெப் கேமரா'க்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் அனைவரும் தவறாமல், ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளிக்க வேண்டும். ஓட்டளிக்கும் உரிமை நம் ஜனநாயக கடமை. 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நம் இலக்கு.

புறக்கணிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தேமுத்துப்பட்டி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இந்த ஊராட்சியை புதுக்கோட்டை மாநகராட்சி உடன் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மொத்தம் 2,200 ஓட்டுகள் உள்ள நிலையில், முதல்முறை வாக்காளர்கள் 8 பேர் மட்டுமே தங்களது ஓட்டினை பதிவு செய்துள்ளனர்.

