ரூ.177 கோடியில் அணைகள் புனரமைப்பு உலக வங்கியுடன் மின்வாரியம் ஒப்பந்தம்
ரூ.177 கோடியில் அணைகள் புனரமைப்பு உலக வங்கியுடன் மின்வாரியம் ஒப்பந்தம்
ADDED : பிப் 19, 2025 12:19 AM
சென்னை:நீலகிரி, திருநெல்வேலி மாவட்டங்களில், மூன்று அணைகளில், 177 கோடி ரூபாய் செலவில், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, உலக வங்கியுடன் மின்வாரியம் ஒப்பந்தம் செய்ய உள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதியில், மின்வாரியத்திற்கு 2,321 மெகாவாட் திறனில், 47 நீர்மின் நிலையங்கள் உள்ளன. அவற்றின் அருகில் உள்ள, 74 அணை, சிறிய அணைகளில், மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. அணைகள் கட்டப்பட்டு, பல ஆண்டுகள் ஆகின்றன.
முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால், முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, உலக வங்கி நிதி உதவியுடன், அணைகளை புனரமைக்கும் பணியில், மின் வாரியம் ஈடுபட்டுள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம் - ஒன்றின் கீழ், 167 கோடி ரூபாயில், 20 அணைகளில் சேதமடைந்த பகுதிகளை சீரமைத்தது, கரைகளை பலப்படுத்துவது, துார் வாருவது உள்ளிட்ட பணிகள், 2015 முதல், 20 வரை நடந்தன.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள், 277 கோடி ரூபாய் செலவில், 27 அணைகளில் நடக்கிறது. இந்த பணிகள், 2021ல் துவங்கி, 2027ல் முடிவடைகின்றன. இதுவரை, 10 அணைகளில் புனரமைப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், ஆறு அணைகளில் பணி நடக்கிறது. மற்றவற்றில் விரைவில் துவங்க உள்ளது.
மூன்றாவது கட்டமாக, 177 கோடி ரூபாய் செலவில், நீலகிரியில் உள்ள குந்தா பாலம், பில்லுார், திருநெல்வேலியில் பாபநாசம் ஆகிய அணைகளில், புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக உலக வங்கியுடன், மின்வாரியம் அடுத்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளது. புனரமைப்பு பணிகளை, இந்த ஆண்டு துவக்கி, 2031ல் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

