புகாரை உதாசீனப்படுத்தாதீங்க பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுரை
புகாரை உதாசீனப்படுத்தாதீங்க பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுரை
ADDED : மே 22, 2025 01:35 AM
சென்னை:நுகர்வோர்கள், உள்ளாட்சி அமைப்பினர், தொழில் துறையினர், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் தெரிவிக்கும் புகார்களை உடனடியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்யுமாறு, இயக்குநர்கள், தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
புதிய மின் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட மின்சார சேவைகள், புதிய துணை மின் நிலையம் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதில், மின்வாரியத்தின் அனைத்து மட்டங்களிலும் தாமதம் ஏற்படுகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு, அனைத்து மட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்கும், ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
பெறப்படவில்லை
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
வட சென்னை வளர்ச்சி திட்டம் குறித்து, துணை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் நடத்திய ஆய்வு கூட்டத்தில், 'அனுமதிக்கப்பட்ட 17 மின்சார பணிகளில் ஒன்றுக்கு கூட, இதுவரை அரசாணை பெறப்படவில்லை' என, சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் நடந்து வரும் மின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் கவனம் செலுத்துவதுடன், தொடர்ந்து கண்காணிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மட்டத்திலும் ஏற்படும் தாமதத்தை அடையாளம் கண்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைவாக தீர்வு காணப்பட வேண்டும். மின்வாரியம், பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதில், முன்னுரிமையுடன் செயல்படும் நிறுவனமாக இருக்க வேண்டும்.
வட சென்னை வளர்ச்சி திட்டம் மற்றும் உலக முதலீட்டாளர் மாநாட்டு தொடர்பான திட்டங்களின் கீழ் உள்ள மின் திட்ட பணிகளை, தாமதமின்றி விரைவாக செயல்படுத்த வேண்டும். மின் திட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பது, கொள்முதல் ஆணைகளை வழங்குவது உள்ளிட்ட, நிர்வாகப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
வெளிப்படைத்தன்மை
ஒப்பந்த விதிகளை பயன்படுத்துவதில் 'வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
'நுகர்வோர், உள்ளாட்சி அமைப்புகள், தொழில் துறையினர், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் எழுப்பும் பிரச்னைகளை, உடனடியாக வெளிப்படையாகவும், பொறுப்புணர்வுடனும் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.