ADDED : மார் 19, 2024 02:12 AM
சென்னை : தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் தினமும், 16,000 மெகா வாட்டாக உள்ள மின் தேவை தற்போது, 18,500 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.
அதை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைத்தாலும், மின் சாதனங்களில் ஏற்படும் பழுது காரணமாக சில இடங்களில், மின் தடை ஏற்படுகிறது.
இதை விரைந்து சரிசெய்ய மின் வினியோக பணியில் அதிக கவனம் செலுத்துமாறு பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய தலைமை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் பொது தேர்வு தடையில்லாமல் மின்சாரம் வழங்க, மின் சாதனங்களில் பராமரிப்பு பணி நிறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, மாலை, 6:00 மணி முதல் நள்ளிரவு, 12:00 மணி வரை மின் தேவை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
இந்நேரங்களில், மின் சாதனங்களில் ஏற்படும் பழுதை விரைந்து சரிசெய்ய இரவு வரை அலுவலகங்களில் இருந்தபடி, மின் வினியோக பணிகளில் அதிக கவனம் செலுத்துமாறு உதவி பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

