டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை: கனிமொழி எம்.பி., புகாருக்கு மின் வாரியம் தரப்பு விளக்கம்
டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை: கனிமொழி எம்.பி., புகாருக்கு மின் வாரியம் தரப்பு விளக்கம்
ADDED : நவ 07, 2026 08:11 PM
துாத்துக்குடி: துாத்துக்குடி, கருங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின் தடை ஏற்பட்டது தொடர்பாக, தி.மு.க., - – எம்.பி., கனிமொழி எழுப்பிய குற்றச்சாட்டுக்கு, மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
துாத்துக்குடி தி.மு.க., -– எம்.பி., கனிமொழி தன், ‘எக்ஸ்’ தளத்தில், ‘என் துாத்துக்குடி தொகுதியில் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
ஜெனரேட்டரும் பழுதாகி இருந்ததால், மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு ஊசி போட வேண்டிய நிலை செவிலியருக்கு ஏற்பட்டிருக்கிறது.
‘எத்தனை முறை கண்டித்தாலும் த.வெ.க., அரசு திருந்துவதாக தெரியவில்லை. இத்தனை தடைகளுக்கு மத்தியிலும், மக்களின் உயிரை காக்க பணியாற்றும் டாக்டர்களுக்கு என் பாராட்டுக்கள்’ என, தெரிவித்துள்ளார்.
இதற்கு, மின் வாரியம் அளித்துள்ள விளக்கம்:
ஸ்ரீவைகுண்டம் செய்துங்காநல்லுார் பிரிவிற்கு உட்பட்ட கருங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய டிரான்ஸ்பார்மரில் நேற்று முன்தினம் இரவு, 7:10 மணியளவில், ‘எச்.ஜி., பியூஸ்’ பழுது ஏற்பட்டது. இரவு, 7:25 மணியளவில் உடனே புதிய எச்.ஜி., பியூஸ் மாற்றம் செய்யப்பட்டு, மின் வினியோகம் சீரமைக்கப்பட்டது.
தற்போது, அப்பகுதிக்கு சீரான மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
