'கிரீன் காரிடார் - 3' திட்டத்தில் 5 துணைமின் நிலையங்கள் மின் வாரியம் அமைக்கிறது
'கிரீன் காரிடார் - 3' திட்டத்தில் 5 துணைமின் நிலையங்கள் மின் வாரியம் அமைக்கிறது
ADDED : செப் 17, 2025 12:04 AM
சென்னை:காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்வதற்காக, 'கிரீன் காரிடார் - 3' திட்டத்தின் கீழ், கடலுார் உட்பட நான்கு இடங்களில், 230 கி.வோ., திறனில் துணை மின் நிலையங்கள் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், 10,600 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்களும், 11,361 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்களும் உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில், காற்றாலைகள் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது.
எனவே, பல்வேறு தனியார் நிறுவனங்களும், காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்து வருகின்றன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மாநிலம் முழுதும் எடுத்துச் செல்ல, 'கிரீன் காரிடார்' எனப்படும் பசுமை மின் வழித்தட திட்டத்தை, மத்திய அரசு மற்றும் ஜெர்மனியின் கே.எப். டபிள்யு., வங்கி உதவியுடன், தமிழக மின் வாரியம் அமைத்து வருகிறது.
அதன்படி, கிரீன் காரிடார் - 1 திட்டத்தில், 1,100 கோடி ரூபாயில், திண்டுக்கல் மாவட்டம், தென்னம்பட்டியில், 400 கி.வோ., திறனில் துணைமின் நிலையம் உள்ளிட்ட பல துணை மின் நிலையங்களும், தென்னம்பட்டி - துாத்துக்குடி உட்பட பல்வேறு வழித்தடங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
கிரீன் காரிடார் - 2 திட்டத்தில், 1,006 கோடி ரூபாயில் திருநெல்வேலியில், 400 கி.வோ., மற்றும் திருப்பூர், கன்னியாகுமரியில், 230 கி.வோ., திறனில் மூன்று துணைமின் நிலையங்கள், மின் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, கிரீன் காரிடார் - 3 திட்டத்தை செயல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தஞ்சை மாவட்டம், சாலியமங்கலத்தில், 400 கி.வோ., திறனில் துணைமின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இது தவிர, கடலுார் மாவட்டம் சிதம்பரம், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, தஞ்சை மாவட்டம் பாபநாசம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆகிய இடங்களில் தலா, 230 கி.வோ., திறனில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக, மத்திய அரசிடம் நிதியுதவி கேட்கும் பணியில், மின் வாரியம் ஈடுபட்டுள்ளது.

