லாரியிலிருந்து இறங்கி ஓடிய யானை: மாடு, பொருட்கள் சேதம்
லாரியிலிருந்து இறங்கி ஓடிய யானை: மாடு, பொருட்கள் சேதம்
ADDED : மார் 04, 2024 11:50 PM

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ளது கண்ணாடி என்ற பகுதி. இங்கு, வடக்குமுறி என்ற இடத்தில் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் திருவிழாவுக்கு சேகரன் என்ற யானை லாரியில் ஏற்றி அழைத்து வரப்பட்டது.
பாகன்கள் லாரியை நிறுத்தி, டீ குடித்து கொண்டிருந்த போது, அந்த யானை திடீரென லாரியில் இருந்து இறங்கி ஓடியது.
வயல்களில் ஆடு மேய்க்க வந்த பழனியை சேர்ந்த கந்தசாமி என்பவரை தாக்கியது. படுகாயமடைந்த கந்தசாமியை அப்பகுதி மக்கள் மீட்டு, பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மூன்று வீடுகள், இரு கடைகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியது. யானை மிதித்ததில் மூன்று மாடுகள் இறந்தன. தொடர்ந்து, 8 கி.மீ., ஓடிய யானை, மாத்துார் அம்பாட்டு என்னுமிடத்தில் தனியாருக்கு சொந்தமான தோப்பில் நின்றது.
தகவல் அறிந்து அங்கு வந்த பாகன்கள் நீண்ட நேரம் முயற்சித்து யானையை சமாதானப்படுத்தி மரத்தில் கட்டினர். பின், லாரியில் ஏற்றி அழைத்து சென்றனர். இதனால், நான்கு மணி நேரம் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

