காலி மதுபாட்டில் பெறும் திட்டம் எல்லா மாவட்டத்திலும் அமலாகுது
காலி மதுபாட்டில் பெறும் திட்டம் எல்லா மாவட்டத்திலும் அமலாகுது
ADDED : நவ 26, 2024 11:41 PM
சென்னை:'டாஸ்மாக்' கடைகளில், மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், 10 மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ள நிலையில், மற்ற மாவட்டங்களிலும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. 'குடி'மகன்கள் மது அருந்தி விட்டு, காலி பாட்டில்களை சாலைகளில் வீசிச் செல்கின்றனர். இதனால், கால்நடைகள் மட்டுமின்றி, மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தப் பிரச்னை, சுற்றுலா தலங்களில் அதிகம் உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, காலி மது பாட்டில்களை, மதுக்கடைகளிலேயே திரும்பப் பெற டாஸ்மாக் முடிவு செய்தது. தற்போது, நீலகிரி, பெரம்பலுார், கோவை, நாகை, திருவாரூர், தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள, டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறப்படுகின்றன.
அதன்படி, மதுபாட்டில் விற்கப்படும் போது, கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்களை கடைகளில் வழங்கியதும், 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும். இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் விரைந்து செயல்படுத்தும் பணியில், டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இம்மாதம் முதல், அனைத்து மாவட்ட மதுக்கடைகளிலும் காலி பாட்டில்கள் திரும்ப பெறப்பட இருந்தது. மழை உள்ளிட்ட காரணங்களால், வரும் ஜனவரியில் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்' என்றார்.