அமைச்சர் நேரு குடும்ப நிறுவனங்களில் 11 மணி நேர அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு!
அமைச்சர் நேரு குடும்ப நிறுவனங்களில் 11 மணி நேர அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு!
UPDATED : ஏப் 07, 2025 07:07 PM
ADDED : ஏப் 07, 2025 08:29 AM

சென்னை: சென்னையில் ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட 13 இடங்களில் அமைச்சர் நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழக அமைச்சர் நேருவின் சகோதரர்கள் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அவர்களது நிறுவனங்கள் மீது பல்வேறு கால கட்டங்களில் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.இத்தகைய சூழ்நிலையில், கே.என்.நேருவின் குடும்பத்தினருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களில் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேரு மகன் வீட்டில் சோதனை
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. ஆழ்வார்பேட்டையில் அமைச்சர் கே.என். நேருவின் மகனும், பெரம்பலூர் தொகுதி எம்.பி.,யுமான அருணுக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருச்சி தில்லைநகரில் அமைச்சர் நேருவின் மகன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
கோவையிலும் ரெய்டு
கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
என்ன காரணம்
இதில் ட்ரூடம் இ.பி.சி., என்ற நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 22 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இயக்குனராக உள்ளார்.இந்த வழக்கு தொடர்பாகவும், நேரு குடும்பத்தினர் நடத்தும் கட்டுமான நிறுவனங்களில் நடக்கும் பண முறைகேடுகள் தொடர்பாகவும் ரெய்டு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பாக, இன்று காலை 7 மணி முதல் நடத்தப்பட்ட அமலாக்கத்துறையினரரின் ரெய்டு, 11 மணி நேரத்துக்கு பிறகு முடிவுக்கு வந்தது. ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.