செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஆகஸ்டிலேயே அனுமதி: உண்மையை போட்டுடைத்த பழனிசாமி
செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஆகஸ்டிலேயே அனுமதி: உண்மையை போட்டுடைத்த பழனிசாமி
ADDED : அக் 20, 2025 07:21 AM

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
நெல் கொள்முதலுக்கு போதுமான சாக்கு பைகள் இல்லை. அவற்றை பாதுகாக்க தார்ப்பாய்கள் இல்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே, 2 கி.மீ., துாரம், நெல்லை கொட்டி வைத்து, வழிமேல் விழிவைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
அறியாமை நெல் மூட்டைகளை, மழையில் இருந்து பாதுகாக்க, தேவையான தார்ப்பாய்களை கூட, தி.மு.க., அரசு கொடுக்கவில்லை.
இதைக் கேட்டால், அமைச்சர் சக்கரபாணி சமாளிக்கிறாரே தவிர, கொள்முதல் செய்யும் நெல்லை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்போதே, 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்கலாமா என, அமைச்சர் கேட்பது, அவரது அறியாமையை காட்டுகிறது.
பருவமழை துவங்கி, அறுவடை செய்த நெல் சாலையில் கிடக்கிறது. அறுவடைக்கு தயாரான நெல்மணிகள் தண்ணீரில் மிதக்கின்றன. இனியும் காலம் தாழ்த்துவதில் அர்த்தம் இல்லை.
விவசாயிகள் கண்ணீர் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு, மத்திய அரசிடம் அனுமதி பெற்று தந்தால், நெல் தேங்கும் நிலை ஏற்படாது என, சட்டசபையில் உண்மைக்கு மாறாக, மத்திய அரசு மீது அமைச்சர் பழி சுமத்தினார்.
ஆக., 18ம் தேதியே மத்திய அரசு, இதற்கான அனுமதியை வழங்கிவிட்டது. இதை மறைத்து, தி.மு.க., அரசு மக்களை ஏமாற்றுகிறது. மதுரை மாவட்டத்தில், 41 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டும், இதுவரை ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கூட திறக்கவில்லை.
இந்தாண்டு தீபாவளியை சிறப்பாக கொண்டாடலாம் என, ஆசையோடு விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், போட்ட பணத்தை கூட எடுக்க முடியாமல், இப்போது கண்ணீர் சிந்துகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.