டி.டி.ஆர்., சான்றை நகரம் மாற்றி பயன்படுத்த அனுமதி? விதிகளை தளர்த்த வீட்டுவசதி துறை அதிகாரிகள் திட்டம்
டி.டி.ஆர்., சான்றை நகரம் மாற்றி பயன்படுத்த அனுமதி? விதிகளை தளர்த்த வீட்டுவசதி துறை அதிகாரிகள் திட்டம்
ADDED : அக் 20, 2025 07:26 AM

சென்னை: டி.டி.ஆர்., எனப் படும் வளர்ச்சி உரிமை மாற்று சான்றிதழை, நகரம் மாற்றி பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் விதிகளை தளர்த்த, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஒவ்வொரு பகுதியி லும், நிலத்தின் மொத்த பரப்பளவில் எந்த அளவுக்கு கட்டடம் கட்டலாம் என்ற வரையறை உள்ளது.
அதேநேரத்தில், நகர்ப்புற பகுதிகளில், சாலை விரிவாக்கம், மேம்பாலம் அமைத்தல் போன்ற காரணங்களுக்காக, தனியாரின் நிலங்கள் மொத்தமாக அல்லது பகுதியாக கையகப்படுத்தப்படுகின்றன. அவ்வாறு நிலம் எடுக்கும் சூழலில், அதற்கான இழப்பீடை ரொக்கமாக தரும் போது, திட்டத்துக்கான செலவு பல மடங்காக அதிகரிக்கிறது.
இந்நிலையில், அரசு திட்டங்களுக்காக ஒரு நிலத்தை எடுக்கும் போது, அதன் உரிமையாளர் அந்நிலத்தில் எவ்வளவு பரப்பளவுக்கு கட்டடம் கட்ட முடியுமோ, அந்த உரிமையை தனக்கு சொந்தமான வேறு நிலத்தில் அவர் பயன்படுத்தலாம்.
அதாவது, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கான வளர்ச்சி உரிமையை, வேறு இடத்தில் பயன்படுத்த இந்த வழிமுறை அனுமதிக்கிறது.
நிலத்தின் உரிமையாளர், நிலம் பெறும் துறை ஆகியவற்றுக்கு இடையே ஏற்படும் உடன்பாட்டின் அடிப்படையில், சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., போன்ற அமைப்புகள், இதற்கான வளர்ச்சி உரிமை மாற்று சான்றிதழை வழங்குகின்றன. இந்தச் சான்றிதழை பயன்படுத்தி, நிலத்தின் உரிமையாளர் வேறு பகுதியில், கூடுதல் பரப்பளவுக்கு கட்டடம் கட்டிக் கொள்ளலாம்.
குறிப்பாக, இதுபோன்ற வளர்ச்சி உரிமை மாற்று சான்றிதழை பெற்றவருக்கு, வேறு பகுதியில் நிலம் இல்லாத நிலையில், அதை அவர் விற்பனையும் செய்யலாம். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, நிலம் கொடுத்த பலர், வளர்ச்சி உரிமை மாற்று சான்றிதழை தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விதிகளில், இந்த உரிமையை சம்பந்தப்பட்ட நகரத்துக்கு வெளியே பயன்படுத்துவது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. நகரம் மாற்றி இந்த உரிமையை பயன்படுத்த அனுமதித்தால், இதில் பங்கேற்க பலரும் முன்வருவர் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, சென்னையில் அரசு திட்டத்துக்கு நிலம் கொடுத்த ஒருவர், அதற்கான வளர்ச்சி உரிமையை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் உள்ள தன் நிலத்தில் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் வளர்ச்சி உரிமை மாற்று சான்றிதழ் திட்டம் அமலில் உள்ளது. விபரம் அறிந்த கட்டுமான நிறுவனங்கள் மட்டுமே, இதில் ஆர்வம் காட்டுகின்றன.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில், நகரங்களுக்கு இடையே மாற்றி பயன்படுத்தும் வகையில், வளர்ச்சி உரிமை மாற்று சான்றிதழ் வழங்குவது துவங்கி உள்ளது. இதற்கு பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள் இடையே ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது.
இதன் அடிப்படையில், தமிழகத்திலும் நகரங்களுக்கு இடையே மாற்றி பயன்படுத்தும் வகையில், வளர்ச்சி உரிமை மாற்று சான்றிதழ் வழங்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். அரசின் அனுமதி பெற்று, இதற்கான விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.