ADDED : அக் 20, 2025 07:20 AM

சென்னை: ''முதல்வர் ஸ்டாலின், தினமும் ஒரு 'டிராமா' போடுகிறார்'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், 13,000 கோடி ரூபாயை, தமிழக அரசு செலவு செய்யவில்லை.
முதல்வர் ஸ்டாலின், தினமும் ஒரு 'டிராமா' போடுகிறார். பா.ஜ.,வில் சேர்ந்து விட்டால், 'வாஷிங் மிஷினில்' போட்ட மாதிரி, எல்லோரும் சுத்தமாகி விடுவரா என கேட்கிறார். செந்தில் பாலாஜியை, அவர் எந்த 'வாஷிங் மிஷினில்' போட்டு எடுத்தார்.
'இரும்பின் தொன்மையை சொன்னோம்; இன்னும் வெளியிடவில்லை' என, ஸ்டாலின் குறை கூறுகிறார். கீழடி அகழ்வாராய்ச்சிக்கு பிரதமர் மோடி தான் காரணம். அதை ஆரம்பித்து வைத்தவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது கருப்பு கொடி காட்டியவர்கள் தி.மு.க., வினர்.
வெறுமனே, தி.மு.க.,வினர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால், எங்களுக்கும் பதிலடி கொடுக்க தெரியும். கச்சத்தீவை ஏன் தாரை வார்த்தீர்கள்; தாரை வார்க்கும்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கச்சத்தீவை மீட்க பார்லி மென்டில் பேசினீர்களா?
தமிழகத்தில், வெடிக்கும் தீபாவளியாக இல்லாமல், குடிக்கும் தீபாவளியாக தி.மு.க., அரசு மாற்றி விட்டது.
அடுத்த ஆண்டு, தே.ஜ., கூட்டணி ஆட்சியை அமைத்து, அடுத்த தீபாவளியை வெற்றி தீபாவளியாக கொண்டாடுவோம். பாராபட்சமின்றி, அனைவருக்கும் வாழ்த்து சொல்வோம்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.