'அனுபவம் உள்ளவர்களுடன் சேர்ந்து விஜய் தேர்வு எழுத வேண்டும்'
'அனுபவம் உள்ளவர்களுடன் சேர்ந்து விஜய் தேர்வு எழுத வேண்டும்'
ADDED : அக் 20, 2025 07:17 AM

மதுரை: ''த.வெ.க., தலைவர் விஜய், அனுபவம் உள்ளவர்களுடன் சேர்ந்து தேர்வு எழுத வேண்டும்,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டசபை கூட்டம் நடக்கும் என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், ஐந்தாண்டுகளில் 100 நாட்கள் கூட சபை நடக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதைக்கூட, நேரலை செய்வதில் இருட்டடிப்பு செய்துள்ளனர்.
ரூ.3 லட்சம் கோடி துணை மானியக் கோரிக்கையில் கூடுதல் செலவு 3,000 கோடி ரூபாய் காட்டப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, நாட்டில் கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
தற்போது 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமை உள்ளது என்றால், அதில் 40,000 கோடி ரூபாய்க்கு கூட மூலதன செலவுக்கு பணம் ஒதுக்கவில்லை. மூலதன செலவு குறித்து எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பினால், அதற்கு முழுமையான பதில் இல்லை.
கொரோனா காலத்தில் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் எனக்கூறி, தற்போது 150 சதவீதம் உயர்த்தியுள்ளனர். இதுகுறித்து கேட்டால், 'மத்திய அரசு உயர்த்த சொல்கிறது; அதனால் செய்தோம்' என்கின்றனர்.
பெயர்சூட்டு விழா அப்படியென்றால், மத்திய அரசு சொல்வதைத்தான் தமிழக அரசு கேட்கிறதா. மாநில அரசின் இயலாமையை மறைக்க, மத்திய அரசு மீது பழி சுமத்துகின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு, நான்கரை ஆண்டுகளாக பெயர் சூட்டு விழாவை தான் தி.மு.க., ஆட்சி நடத்துகிறது.
விளம்பர வெளிச்சத்தில் ஆட்சி நடக்கிறது. மதுரை மாநகராட்சியில், 200 கோடி ரூபாய் சொத்துவரி முறைகேடு நடந்துள்ளது.
சட்டசபையில் நான் பேச போகிறேன் எனத் தெரிந்தவுடன், அவசரமாக மேயரை ராஜினாமா செய்ய வைத்தது. வரிமுறைகேட்டில் ஈடுபட்டது தான் தி.மு.க.,வின் சாதனை.
கரூர் சம்பவத்தால் விஜய் மனவேதனையில் உள்ளார். அங்கு நடந்த சம்பவத்திற்கு விஜய் காரணமல்ல என பழனிசாமி கூறியுள்ளார். தி.மு.க.,வை வீழ்த்த பழனிசாமி தலைமையில் ஒன்றிணைய வேண்டும். அனுபவம் உள்ளவர்களுடன் சேர்ந்து விஜய் தேர்வு எழுத வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.