நெசவாளர்களுக்கு தொழில்வரி விதிக்க தமிழக அரசு முயற்சி; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
நெசவாளர்களுக்கு தொழில்வரி விதிக்க தமிழக அரசு முயற்சி; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
ADDED : நவ 22, 2024 05:50 PM

சென்னை: குடிசைத் தொழில் போல் வீடுகளிலேயே தறிகளை வைத்து நெசவு வேலை செய்து வரும் நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க தமிழக அரசு முயற்சிப்பதாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்;
தமிழகத்தில் நெசவாளர்களின் நிலைமை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது. கைத்தறி மற்றும் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என்று பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்த தி.மு.க., ஆட்சியில் தாறுமாறாக நூல் விலை உயர்ந்ததுடன், விலையில்லா சீருடை, விலையில்லா வேட்டி, சேலை போன்ற திட்டங்களுக்கான பணிகளை முழுமையாக தமிழக நெசவாளர்களுக்கு வழங்காதது போன்ற நிகழ்வுகளால், முதலாளிகளாக சொந்தத் தொழில் செய்து வந்த நெசவாளர்கள், தங்களது தறிகளை பழைய இரும்புக் கடைகளுக்கு விற்றுவிட்டு வேறு தொழில்களுக்கு பணியாட்களாக இடம் மாறி, தங்களது வாழ்க்கையை மிகுந்த சிரமத்துடன் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, சேலம், நாமக்கல், ஈரோடு போன்ற பகுதிகளில் தயாரிக்கப்படும் சேலை ரகங்களைப் போன்றே,வெளிமாநிலங்களில் இருந்து போலியாக தரமற்ற சேலைகள் தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு சந்தையில் விற்பனை செய்யப்படுவதால், உள்ளூர் நெசவாளர்கள் தயாரிக்கும் சேலைகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல், ஜவுளி தேக்கமடைந்துள்ளன. இதனால், தினசரி செலவுக்கு நெசவுக் கூலியை மட்டுமே நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சரியான சம்பளம் இன்றி, தங்களுக்குத் தெரிந்த நெசவுத் தொழிலை விட்டு, வேறு வேலைகளைத் தேடி அலையும் அவல நிலை அதிகரித்துள்ளது.
நெசவாளர்களில் பலர், தாங்கள் வாழும் வீடுகளிலேயே ஓரிரு தறிகள் வைத்து குடிசைத் தொழில்போல் தறிகளை இயக்கி அந்த வருமானத்தில் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள். இந் நிலையில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், தமிழகம் முழுவதும் குடிசைத் தொழில்போல ஓரிரு தறிகளை வைத்து நெசவுத் தொழில் செய்து வரும் நெசவாளர்கள் வீட்டில், உள்ளாட்சித் துறை அலுவலர்கள், தறிகள் உள்ள இடங்களைக் கணக்கீடு செய்து அப்பகுதிகளுக்கு வணிக ரீதியில் தொழில் வரி விதிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.
அ.தி.மு.க., அரசு மேற்கொண்ட பல்வேறு திட்டங்களினால், தமிழகத்தில் நெசவுத் தொழில் காக்கப்பட்டது. ஆனால் இன்று, குடிசைத் தொழில்போல் வீடுகளிலேயே ஒரிரு தறிகள் வைத்து நெசவுத் தொழில் செய்துவரும் நெசவாளர்களின் தலையில் இடி விழுந்தது போல், தறிக் கூடங்களை அளவெடுத்து தொழில் வரி விதிக்க முனைந்துள்ள தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். .
எனவே, உடனடியாக தமிழகமெங்கும் இதுபோன்ற தறிகள் உள்ள பகுதிகளை கணக்கீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், நூலுக்கான வரிகளை முழுமையாக நீக்கவும், கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் தயாரிக்கப்படும் ஜவுளிகளுக்கு GST வரி விதிப்பில் விலக்கு பெற்று, மீண்டும் தமிழகத்தில் நெசவுத் தொழில் தலைநிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.