புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தும் ஆவண சரிபார்ப்புக்கே தாமதமாகிறது: விண்ணப்பதாரர்கள் புலம்பல்
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தும் ஆவண சரிபார்ப்புக்கே தாமதமாகிறது: விண்ணப்பதாரர்கள் புலம்பல்
ADDED : ஆக 04, 2025 12:37 AM

விருதுநகர்: புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தால் ஆவண சரிபார்ப்பு நிலை வருவதற்கே இரண்டு மாதங்களாகிறது.
பலருக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலை இருக்கிறது என புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்கள் புலம்புகின்றனர்.
புதிதாக திருமணமானவர்கள் தனி ரேஷன் கார்டு பெற உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கின்றனர்.
இணையத்தில் பதிவு செய்தவுடன் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ள 14 இலக்க தனி எண் கொடுக்கப்படுகிறது.
இதில் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட நிலை, ஆவண சரிபார்ப்பு நிலை, துறை சரிபார்ப்பு நிலை, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் நிலை ஆகியவை முடிந்து புதிய ரேஷன் கார்டு (மின்னணு அட்டை) வழங்கப்படும்.
ஆனால் ஜூன் மாதத்தில் பதிவு செய்த விண்ணப்பத்தாரர்களுக்கு இதுவரை ஆவண சரிபார்ப்பு நிலை கூட வராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பலருக்கு இரண்டு மாதங்களை கடந்தும் ஆவணங்கள் சரிபார்ப்பு நிலைக்கு வராமல் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் நிலை தொடர்கிறது. புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஒரு மாதத்தில் வழங்கப்படும் என அரசு தெரிவித்தாலும் பணியில் மந்த நிலையே தொடர்கிறது.
மே மாதத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது தான் ஆவண சரிபார்ப்பு நடக்கிறது.
ஜூன் மாதத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் சரிபார்ப்பு பணி நடக்கும்.
அதிகமாக புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் வருவதாலும், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்து பெற்றவர்கள் உடனடியாக உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பிப்பதாலும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சில அதிகாரிகள் தெரிவித்தனர்.