நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் கண்காணிப்பது அரசின் கடமை: தீர்ப்பாயம்
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் கண்காணிப்பது அரசின் கடமை: தீர்ப்பாயம்
ADDED : நவ 13, 2025 02:09 AM
சென்னை: 'நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும், மீண்டும் ஏற்படாமல் தடுப்பது அரசின் கடமை' என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில், கடலோர கிராமங்களில், வைப்பாறு ஆற்றின் கிளை ஆறுகள், காட்டு ஓடைகளை ஆக்கிரமித்து, உப்பு தயாரிக்கும் தொட்டிகளை பலர் அமைத்துள்ளனர்.
இதனால், இயற்கையான நீர்வழித்தடங்களில் நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட, இந்த ஆக்கிரமிப்பு தான் காரணம் என, 2023 டிசம்பரில், நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் விசாரித்த தீர்ப்பாயம், ஆக்கிரமிப்புகளை அகற்ற, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
விளாத்திகுளம் பகுதி கடலோர கிராமங்களில், உப்பு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாக, துாத்துக்குடி மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.
ஆனால், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில், ஆறுகளை ஒட்டி உப்பு தயாரிப்பு நடப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2023ல் ஏற்பட்ட கடுமையான வெள்ள பாதிப்புக்கு, இந்த ஆக்கிரமிப்புகள் காரணம் என கூறப்படுகிறது. இயற்கையான நீர்வழித்தடங்களுக்கு தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, அரசின் கடமை.
விளாத்திகுளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இன்றுவரை சம்பந்தப்பட்ட நீர்நிலைகளில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்றும், துாத்துக்குடி கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
ஆனாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

