ADDED : ஜன 27, 2025 03:33 AM
புதுக்கோட்டை: ''இது ஈ.வெ.ரா., மண் கிடையாது. அவரே ஒரு மண் தான்,'' என, புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று அவர் கூறியதாவது:
தமிழகத்தில் முதன்முதலில் ஹிந்தி பள்ளியை திறந்தவர் ஈ.வெ.ரா., தான். ஹிந்திக்கு எதிராக போராடுபவர்களை பெட்ரோல், டீசல் ஊற்றி எரியுங்கள் என, கூறியது ஈ.வெ.ரா., தான்.
எதற்கெடுத்தாலும் ஈ.வெ.ரா., மண் என்கின்றனர். அவரே ஒரு மண் தான். ஈ.வெ.ரா., விவகாரத்தில் பா.ஜ.,வை தவிர, அனைத்து கட்சிகளும் என்னை எதிர்ப்பதை நான் வரவேற்கிறேன்.
ஈ.வெ.ரா., கூறிய பிராமணியத்தை எதிர்ப்பதாக இருந்தால், ஒரு பிராமணப்பெண் முதல்வராக இருந்தபோது, அவருக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்தது யார்? அவரை வணங்கி அம்மா, அம்மா என்று இருந்தது யார்?
ஈ.வெ.ரா., எதிர்த்த பிராமண சமுதாயத்தை சேர்ந்த பெண் முதல்வராக இருந்த போது தான், 69 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார். சட்ட பாதுகாப்பை அவர் தான் கொடுத்தார். அருந்ததியர் ஒருவரை சபாநாயகர் ஆக்கியது அந்த பிராமண பெண் தான்.
வீடியோ, ஆடியோ
வரும், 2026 தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற வாய்ப்பில்லை. அ.தி.மு.க., விற்கும், தி.மு.க.,விற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஒரு கட்சியில் அண்ணாதுரை படம் உள்ளது.
மற்றொரு கட்சியில் அந்த படம் இல்லை. ஆனால், இருவரும் பல்வேறு விஷயங்களிலும், நடவடிக்கைகளிலும் ஒன்றாக தான் உள்ளனர்.
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கும் போது, பல்வேறு மொபைல் போன்கள் மூலமாக பெறப்பட்ட ஆதாரங்கள், அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு, அதன் பிறகு தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என, கூறியுள்ளனர். ஆனால், வீடியோ, ஆடியோ எப்படி வெளியானது?
காவல்துறைக்குள் அதிகாரி ஒருவரை மொபைல் போன் திருடராக வைத்துக் கொண்டு, போன்களில் உள்ள வீடியோக்கள், ஆடியோக்களை எடுத்து வெளியிடுவது தான் அதிகாரிக்கு அழகா? எங்கள் ஆடியோக்கள், வீடியோக்கள் வெளியே வரும்போது அனைவரும் சந்தோஷப்பட்டனர்.
சந்தோஷப்படுங்கள்
தற்போது, வேங்கைவயல் வழக்கில் ஆடியோ, வீடியோக்கள் வெளிவந்துள்ளதையும் பார்த்து அனைவரும் சந்தோஷப்படுங்கள்.
அதேபோன்று கனிமவள கொள்ளைக்கு எதிராக ஜெகபர் அலி புகார் அளித்த போது, புதுக்கோட்டை எஸ்.பி.,யாக இருந்தது யார் என, அனைவருக்கும் தெரியும். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

