விஜயகரிசல் குளத்தில் அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவு * தொல்லியல் ஆர்வலர்கள் ஏமாற்றம்
விஜயகரிசல் குளத்தில் அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவு * தொல்லியல் ஆர்வலர்கள் ஏமாற்றம்
ADDED : மே 24, 2025 02:02 AM
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் நடைபெறும் அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 25 ஏக்கர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் 5 ஏக்கரில் மட்டுமே அகழாய்வு பணிகள் நடந்துள்ளதால் தொல்லியல் ஆர்வலர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை திருமலாபுரம், கொங்கல் நகரம் உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது.
விஜய கரிசல்குளத்தில் முதற்கட்ட அகழாய்வில் 16 குழிகளில் 3254, இரண்டாம் கட்ட அகழாய்வில் 18 குழிகளில் 4653 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது நடந்து வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் 22 குழிகளில் சூது பவள மணி, தங்கமணி, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் சுடுமண் உருவ பொம்மை உள்ளிட்ட 5003 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கட்டத்திற்கும் தலா ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது. 2025 மே இறுதி வரை நடக்கயிருந்த பணிகள் இங்கு முன்னதாகவே முடிவுக்கு வந்துள்ளன. மற்ற அகழாய்வு இடங்களை விட இங்கு மட்டுமே அதிக பொருட்கள் கிடைத்துள்ளன. தவிர வேறு எந்த அகழாய்வு இடத்திலும் கிடைக்காத அலங்கரிக்கப்பட்ட வண்ண சங்கு வளையல்கள், சூது பவள மோதிரக்கல் இங்கு மட்டுமே கிடைத்துள்ளது.
இப்படி அரிய பொருட்கள் கிடைக்கப்பட்டிருந்தும் இங்கு நடைபெறும் பணிக்கு சமீபத்தில் நடந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. இதனால் அகழாய்வு பணி முடிவுக்கு வந்துள்ளது. மொத்தம் 25 ஏக்கர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் 5 ஏக்கரில் மட்டுமே அகழாய்வு பணி நடந்துள்ளது. இதில் கிடைத்துள்ள பொருட்களை வைத்து முன்னோர்களின் முழுமையான வரலாற்றை அறிய முடியவில்லை. தவிர இப்பகுதியில் அவ்வப்போது முதுமக்கள் தாழி கிடைத்த நிலையில் அதுகுறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் முன்னோர்களின் முழுமையான வரலாற்றை அறிய முடியவில்லை. எனவே இங்கு அகழாய்வுப் பணியை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் முன்னோர்களின் முழுமையான வரலாற்றை அறிய முடியும் என்றனர் தொல்லியல் ஆர்வலர்கள்.

