இடைத்தேர்தலில் ஒதுங்கிய கூட்டணி கட்சிகள் பிரசாரத்தில் பங்கேற்பதை தவிர்த்த நிர்வாகிகள்
இடைத்தேர்தலில் ஒதுங்கிய கூட்டணி கட்சிகள் பிரசாரத்தில் பங்கேற்பதை தவிர்த்த நிர்வாகிகள்
ADDED : பிப் 01, 2025 08:44 PM
ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கூட ஒதுங்கியதுடன், பிரசாரத்தில் பங்கேற்பதையும் தவிர்த்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பிரதான எதிர் கட்சிகளான அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், தேர்தலை புறக்கணித்து ஒதுங்கியது. பா.ம.க., உட்பட சில கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்யாமல் நின்றுள்ளனர்.
இதனால் தி.மு.க., - நா.த.க., தவிர சுயேட்சைகளே களத்தில் உள்ளதால், தி.மு.க., ஆரம்பம் முதல் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறது. அதனால், முதல்வர், துணை முதல்வர், எம்.பி., கனிமொழி உட்பட அக்கட்சி அமைச்சர்கள் கூட பிரசாரம், மக்கள் சந்திப்பில் பங்கேற்கவில்லை.
கடந்த, 2 முறை காங்., சார்பில் திருமகன் ஈவெரா, இளங்கோவன் இத்தொகுதியில் நின்று இறந்ததால், தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தமிழக தலைவர்கள் திருநாவுக்கரசர், தங்கபாலு ஆகியோர் பிரசாரத்துக்கு பெயரளவில் வந்து சென்றனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் முகைதீன், இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன், ம.தி.மு.க., துரை வைகோ ஆகியோரும் பங்கேற்று சென்றனர். மா.கம்யூ., மாநில செயலளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் திருமாவளன் உட்பட பிற சிறிய அமைப்பு தலைவர்கள் கூட பங்கேற்கவில்லை.
அதேநேரம், தி.மு.க.,வும் மிகச்சில நாட்கள் மட்டுமே களத்தில் பிரசாரம் செய்ததால், கூட்டணி கட்சி நிர்வாகிகளை வற்புறுத்தி பிரசாரம் செய்ய அழைக்கவில்லை.
'கடந்த, 2 முறை காங்., நின்றது. அப்போது கடுமையாக, தி.மு.க.,வினர் உழைத்ததால், நம்மை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் நாம் பிரசாரத்திற்கு செல்வோம்' என, இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் கூறியதால், பெயரளவில் காங்., நிர்வாகிகள் சிலர் மட்டும் தி.மு.க.,வினருடன் பிரசாரத்துக்கு வருகின்றனர்.
கூட்டணியில் உள்ள பிற கட்சி நிர்வாகிகள், கட்சி கொடியை தி.மு.க.,வினரிடம் கொடுத்து, வாகனத்தில் கட்டி வைத்து கொள்ளவும், பணிமனையில் வைக்கவும் மட்டும் செய்தனர். இதனால், ஒவ்வொரு பகுதியிலும் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், அக்கட்சி அல்லது அந்த அமைப்பு சார்ந்தவர்களைக்கூட முறையாக சந்திக்கவில்லை, என்ற குறைபாடு நீடிக்கிறது.
'எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம்' என்ற எண்ணத்தால், வாக்காளர்களை புறக்கணிப்பதாகவே எண்ணுகின்றனர். இதனால் வரும், 5ல் நடக்கும் ஓட்டுப்பதிவில், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.