மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் தனிநபர் பிணையம் வழங்க விலக்கு
மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் தனிநபர் பிணையம் வழங்க விலக்கு
ADDED : மார் 21, 2024 12:26 AM
சென்னை:கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் சிறப்பு சலுகையுடன், மாற்றுத்திறனாளிகள் தொழில் துவங்க கடன் வழங்கப்படுகிறது. அவர்கள், குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்தினால், வட்டி வசூலிக்கப்படுவதில்லை.
தற்போது, 50,000 ரூபாய் வரை தனிநபர் கடனுக்கு, 'ஷ்யூரிட்டி' எனப்படும் ஒருநபர் பிணையம் அளிக்க வேண்டும். 50,001 ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு, இரண்டு நபர்கள் பிணையம் அளிக்க வேண்டும்.
கடன் வாங்குவோருக்கு பிணையம் அளிக்க, பலர் முன்வரவில்லை. எனவே, தனிநபர் பிணையம் அளிப்பதில் விலக்கு அளிக்குமாறு மாற்றுத்திறனாளிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தனிநபர் பிணையத்திற்கு பதில், தமிழக நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை பெற்று கடன் வழங்கலாம் என, கூட்டுறவு வங்கிகளுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
கடன் பெறும் மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர ஓய்வூதிய ஆணையை தனிநபர் பிணையத்திற்கு பதில் பெற்று கடன் வழங்கலாம் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

