விவசாயிகளுக்கு மரியாதை இல்லை; பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வேதனை
விவசாயிகளுக்கு மரியாதை இல்லை; பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வேதனை
ADDED : டிச 12, 2024 08:12 AM

திண்டிவனம் ; திருவண்ணாமலையில் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ள உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாட்டிற்கான பிரசார பாடலை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் வெளியிட்டார்.
பா.ம.க., சார்பில் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு, வரும் 21ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பிரசார பாடல் வெளியீட்டு விழா நேற்று காலை திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் நடந்தது. பா.ம.க,, நிறுவனர் ராமதாஸ், கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பிரசார பாடலை வெளியிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
உழவர் பேரியக்க மாநாட்டில் இரண்டு லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். உழவர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களை களைய வேண்டும் என்பதே, மாநாட்டின் நோக்கம்.
விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு அரசு சிப்காட் என்ற பெயரில் அபகரித்துக் கொள்கின்றது. ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் பல பெயர்களில் நிலங்களை கூறுபோட்டு, உழவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டனர்.
இது தொடர்பாக கடந்த 17 ஆண்டுகளாக நிழல் பட்ஜெட் மூலம் கூறி வருகிறோம். ஆனாலும், உழவர்களுக்கு மரியாதை இல்லை. உழவுத் தொழிலுக்கு பின்னால் உலகமே சுழல்கின்றது. உழவர் கைமடங்கின் உலகமே இல்லை. உழவுத்தொழிலை மேம்படுத்த வழிகள், பிரச்னைகள் என்ன என்பது குறித்து மாநாட்டில் பேச இருக்கிறோம்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
நிகழ்ச்சியில், பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், உழவர் பேரியக்கத் தலைவர் வேலுசாமி, மாநில சமூக ஊடக பேரவை செயலாளர் முகுந்தன், விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

