நேரடி கொள்முதல் நிலையங்களில் கைநீட்டும் ஊழியருக்கு ' கிடுக்கிப்பிடி' அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
நேரடி கொள்முதல் நிலையங்களில் கைநீட்டும் ஊழியருக்கு ' கிடுக்கிப்பிடி' அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜன 11, 2025 08:39 PM
நாகப்பட்டினம்:டெல்டா மாவட்டங்களில், சம்பா அறுவடை துவங்கிய நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கட்டாய வசூலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில், 6 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடந்து, தற்போது சம்பா அறுவடையை துவக்கிஉள்ளனர்.
விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
நாகை மாவட்டத்தில், ஒரு லட்சத்து 62,500 ஏக்கரில் சம்பா, 3,500 ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. முதற்கட்டமாக, 27 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், கோவில்பத்தில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு உடனுக்குடன் கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் நடக்கும் அத்துமீறல்களை கண்காணிக்க, ஒவ்வொரு பருவத்திற்கும் கண்காணிப்பு குழுவை, நுகர் பொருள் வாணிப கழகம் நியமிக்கும்.
ஆனால், நடப்பு பருவத்தில் கண்காணிப்பு குழு அமைக்கப்படவில்லை. இது, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கட்டாய வசூலுக்கு வழிவகுக்கும் என்று விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு, 40 கிலோ எடைக்கு பதிலாக, 42 கிலோ கொள்முதல் செய்த, கொள்முதல் நிலைய ஊழியர்கள், மூட்டைக்கு, 50 ரூபாய் கட்டாய வசூல் வேட்டை நடத்தினர்.
அறுவடை துவங்கும் முன், விவசாயிகள், அறுவடை இயந்திர உரிமையாளர்கள், வேளாண் துறையினர் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு, அரசு அறுவடை இயந்திரம், தனியார் அறுவடை இயந்திரம் தேவை குறித்து ஆலோசிக்கப்பட்டு, இயந்திரத்திற்கான வாடகை தொகை நிர்ணயிக்கப்படும்.
இதனால், விவசாயிகளிடம் கூடுதல் தொகை பெறப்படுவது தடுக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு இது குறித்து அறிவிப்பும் இல்லை. நேரடி நெல் கொள்முதல் நிலைய கண்காணிப்பு குழுவும் அமைக்கப்படாமல் உள்ளது. முறைகேடுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.