சிறுதானிய பயிர்களுக்கும் கடன், காப்பீடு: விவசாயிகள் எதிர்பார்ப்பு
சிறுதானிய பயிர்களுக்கும் கடன், காப்பீடு: விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மே 15, 2025 02:06 AM
விருதுநகர்:'தமிழகத்தில், சிறுதானிய பயிர்களுக்கும் கடன், காப்பீடு, விதை மானியம் வழங்காமல், சிறுதானிய திருவிழாக்களை நடத்துவதால் எந்த பயனும் இல்லை' என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், ஆண்டுதோறும் சிறுதானிய திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. சிறுதானிய சாகுபடி பரப்பு, 63 லட்சத்து 48,000 ஹெக்டேராக உள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் தரிசு நிலங்களை சீரமைத்து புதிதாக, 50,000 ஏக்கரில் சிறுதானியம் சாகுபடி செய்ய திட்டமிட்டு, விவசாயிகளை ஒன்றிணைத்து, 100 சிறுதானிய உற்பத்தி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு பயிற்சி அளித்து, சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டது. சாகுபடி பரப்பு அதிகரிப்பை ஊக்குவித்தல் போன்றவை, இதில் முக்கிய நோக்கங்களாக இருந்தன.
விவசாயிகள் கூறியதாவது:
கேழ்வரகு, திணை, வரகு, சாமை, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் வறட்சி காலங்களில், சாதாரண மண்ணிலும் நன்கு வளரக்கூடியவை. இந்த பயிர்களை அறுவடை செய்வது மிக கடினம்.
வேளாண் பொறியியல் துறை வாயிலாக, வேளாண் இயந்திரங்களை மானியத்தில் வழங்க வேண்டும்.
மற்ற பயிர்களை போல, இதற்கும் பிணையில்லா கடன், விதை மானியம் போன்றவற்றை வழங்க வேண்டும். பயிர் காப்பீடும் அறிமுகப்படுத்த வேண்டும். இவற்றை செய்யாமல், சிறுதானிய திருவிழாக்கள் நடத்துவதால் எந்த பயனும் இல்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.