ADDED : மே 30, 2025 06:09 AM
மதுரை: மதுரையில் ஜூன் 1ல் நடக்கவுள்ள தி.மு.க., பொதுக்குழுகூட்டத்திற்கு வருமுன் மதுரையில் வேளாண் பல்கலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியதாக காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அர்ச்சுணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: 2021 தி.மு.க., தேர்தல் அறிக்கை வாக்குறுதி எண் 28 முதல் 111 வரை விவசாயிகளுக்காக மட்டும் 83 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் வாக்குறுதி எண் 54 ல் 'தென் தமிழகத்திற்கென மதுரையில் வேளாண் பல்கலை அமைக்கப்படும்' என உறுதியளிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டத்திற்காக மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் வரும் முன்பாக பல்கலை அறிவிப்பை வெளியிடுவதே விவசாயிகளுக்கு செய்யும் மரியாதையாக பார்க்கிறோம்.
தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்தாவது ஆண்டு துவங்கி விட்டது. உத்தங்குடியில் தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் தான் அரசு வேளாண் கல்லுாரி உள்ளது. 1965ல் துவங்கி 60 ஆண்டுகள் ஆனநிலையில் நிறைய விருதுகளைப்பெற்றுள்ளது. இந்த வளாகத்தில் வேளாண் பல்கலை அமைப்பது சரியானது என்றார்.