கேழ்வரகுக்கு வெளியில் நல்ல விலை அரசை புறக்கணிக்கும் விவசாயிகள்
கேழ்வரகுக்கு வெளியில் நல்ல விலை அரசை புறக்கணிக்கும் விவசாயிகள்
ADDED : செப் 03, 2025 11:09 PM
சென்னை:வெளிச்சந்தையில் கேழ்வரகுக்கு லாபகரமான விலை கிடைப்பதால், அவற்றை கூட்டுறவு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை, விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் இரண்டு பருவங்களாக, 1.78 லட்சம் ஏக்கரில் கேழ்வரகு சாகுபடி நடந்து வருகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள கேழ்வரகு உணவுகள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
இதனால், கேழ்வரகு தேவையும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. கேழ்வரகு சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வருவாய் அளிக்கும் வகையில், அதை நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைத்து, கொள்முதல் செய்யும் பணிகளை, 2022 - 23ம் நிதியாண்டு முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் செய்து வருகிறது.
இதற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக கிலோவுக்கு, 42.9 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், கொள்முதல் நிலையங்கள் வாயிலாக கேழ்வரகு விற்பனை செய்ய, விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால், நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், ரேஷன் கடைகளில் விற்பனை செய்வது பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, வேளாண் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல் செய்யப்படுகிறது. நாட்டின் கேழ்வரகு உற்பத்தியில், தமிழகம் முதலிடத்தில் இருந்தாலும், தேவைக்கு ஏற்ற உற்பத்தி இல்லை.
சிறுதானிய இயக்கம் திட்டத்தின் கீழ், கேழ்வரகு சாகுபடியை அதிகரிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், உற்பத்தித் திறனில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.
கடந்த 2021 - 22ம் ஆண்டு 2.27 லட்சம் டன், 2022 - 23ம் ஆண்டு 2.06 லட்சம் டன், 2023 - 24ம் ஆண்டு 2.44 லட்சம் டன், 2024 - 25ம் ஆண்டு 3.03 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
வெளிச்சந்தையில் ஒரு கிலோவுக்கு, 50 ரூபாய்க்கு மேல் கிடைக்கிறது. அரசு கொள்முதல் நிலையங்களில், அதை விட குறைந்த விலையே தரப்படுகிறது.
அதனால், அங்கு விற்பனை செய்வதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுவது கிடையாது. தனியாரிடம் லாபகரமான விலையில் விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

