மர்ம விலங்குகள் கடித்து 5 ஆடுகள் பலி தொடரும் சம்பவத்தால் விவசாயிகள் பீதி
மர்ம விலங்குகள் கடித்து 5 ஆடுகள் பலி தொடரும் சம்பவத்தால் விவசாயிகள் பீதி
ADDED : ஆக 14, 2025 12:35 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே மர்ம விலங்குகள் கடித்து, 5 ஆடுகள் பலியாகியன, தொடரும் சம்பவங்களால் ஆடுகள் வளர்ப்போர் பீதியடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை, சேவூர், இறையானுார், கொங்கரப்பட்டு பகுதிகளில், ஆட்டுப்பண்ணைகளில் மர்ம விலங்குகள் புகுந்து கடித்து வருவதால், இதுவரை 80க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகியுள்ளன. ஆடுகளை கடிக்கும் மர்ம விலங்குகளை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, திண்டிவனம்-செஞ்சி சாலையில் உள்ள, குடிசைப்பாளையம் வயல்வௌியில் உள்ள ஆட்டுப்பண்ணையில் மர்ம விலங்குகள் கடித்ததில், 5 ஆடுகள் பலியாகியன. 5 ஆடுகள் காயமடைந்தன.
ஆடுகளை பறிகொடுத்த விவசாயி குமரவேல், வெள்ளிமேடுப்பேட்டை போலீஸ் நிலையம் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட வனச்சரக அலுவலர் கார்த்திகேயன், திண்டிவனம் கோட்ட அலுவலர் புவனேஷ், வனக்காப்பாளர் காந்திமதி, வேட்டை தடுப்பு காவலர் முத்துக்குமரன் ஆகியோர் ஆடுகள் இறந்து கிடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
காயமடைந்த ஆடுகளுக்கு கால்நடைத்துறையினர் சிகிச்சை அளித்தனர். மர்ம விலங்குகள் கடித்ததால் இறந்த 5 ஆடுகள், சம்பவ இடத்திலேய மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இயக்குநர் தண்டபாணி தலைமையில் உடல் பரிசோதனை செய்து, புதைக்கப்பட்டது.
திண்டிவனம் அருகே தொடர்ந்து, மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் இறந்து வருவது, ஆடு வளர்ப்போர் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை ஆடுகளை கடித்து குதறும் மர்ம விலங்கு குறித்து வனத்துறையினரால் அடையாளம் காணமுடியவில்லை. ஓநாயாக இருக்கலாம் என, வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். விவசாயிகளின் அச்சத்தை போக்கும் வகையில், வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து, மர்ம விலங்கை விரைவில் பிடிக்க வேண்டும்.