பா.ம.க.,வில் அப்பா -- மகன் மோதல்; சமுதாய மோதலாக மாறும் அபாயம்?
பா.ம.க.,வில் அப்பா -- மகன் மோதல்; சமுதாய மோதலாக மாறும் அபாயம்?
UPDATED : ஜன 03, 2026 12:43 AM
ADDED : ஜன 03, 2026 12:40 AM

சென்னை: 'பா.ம.க.,வில் அப்பா -- மகன் இடையே ஏற்பட்டுள்ள மோதல், வன்னியர் சமுதாய மோதலாக மாறும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில், 2024 டிசம்பரில் நடந்த பா.ம.க., பொதுக்குழுவில், கட்சியின் இளைஞர் அணி தலைவராக தன் மூத்த மகள் வழி பேரன் முகுந்தனை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நியமித்தார். இதற்கு, ராமதாஸ் மகனும், பா.ம.க., தலைவருமான அன்புமணி அந்த மேடையிலேயே எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
அப்பா - மகன் இடையே வெடித்த இந்த மோதல், ஓராண்டை கடந்தும் முடிவுக்கு வரவில்லை. கட்சியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, மூத்த மகள் ஸ்ரீ காந்தியை பா.ம.க., செயல் தலைவராக ராமதாஸ் நியமித்துள்ளார். அது மட்டுமன்றி அன்புமணியின் மனைவி சவுமியாவின் 'பசுமைத் தாயகம்' தலைவர் பதவியையும், ராமதாஸ் தன் மகளிடம் கொடுத்துள்ளார்.
நேருக்கு நேர்
இந்நிலையில், கடந்த 29ம் தேதி சேலத்தில் ராமதாஸ் நடத்திய பொதுக் குழுவில் பேசிய ஸ்ரீ காந்தியும், அவரது மூத்த மகன் சுகந்தனும், அன்பு மணியை 'பீடை, துரோகி' என கடுமையாக விமர்சித்தனர். இத்தனை காலமாக உள்ளுக்குள் கனன்ற ராமதாஸ் குடும்பச் சண்டை, தீப்பிழம்பாக எரிய துவங்கி உள்ளது.
அன்புமணி தரப்பை தேர்தல் கமிஷன் அங்கீகரித்த நிலையில், அதை எதிர்த்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. ஆனால், சிவில் நீதிமன்றம் செல்லாமல் இரு தரப்பினருமே நாங்கள் தான் உண்மையான பா.ம.க., என கூறி வருகின்றனர்.
வரும் சட்டசபை தேர்தலில், இரு தரப்பும் வெவ்வேறு கூட்டணியில் இடம் பெறுவதோடு, இரு தரப்பு வேட்பாளர்களும் பல தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுவதும் உறுதியாகி உள்ளது. அன்புமணியின் அக்கா ஸ்ரீ காந்தி, பென்னாகரம் அல்லது தர்மபுரி தொகுதியில் களமிறங்க முடிவு செய்துள்ளார்.
இந்த தொகுதிகளில் ஒன்றில், அன்புமணி அல்லது அவரது மனைவி சவுமியா போட்டியிடுவர் என, பா.ம.க.,வினர் கூறுகின்றனர். இதனால், ராமதாஸ் குடும்பத்தினரே தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகும்.
பென்னாகரத்தில் ஸ்ரீ காந்தி அல்லது அவரது மகன் சுகந்தன் போட்டியிட்டால், தற்போது அத்தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருக்கும் ஜி.கே.மணி, மேட்டூர் தொகுதியில் போட்டியிடுவார்.
அப்பாவிடம் இருந்து தன்னை பிரித்தது ஜி.கே.மணி தான் என கூறி வரும் அன்புமணி, அவரை தோற்கடிக்க தன் குடும்பத்திலேயே ஒருவரை நிறுத்துவார் என கட்சியினர் கூறுகின்றனர்.
இதனால், சமூக வலைதளங்களில் நடந்து வரும் ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மோதல், தேர்தல் களத்திலும் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கேள்விக்குறி
இது தொடர்பாக, பா.ம.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ராமதாசின் அழைப்பை ஏற்று, வன்னியர் சமுதாயம் அவர் பின்னால் அணி வகுத்ததோடு, அவர் அடையாளம் காட்டியதால் அன்புமணியையும் ஏற்றது. பா.ம.க.,வை காப்பாற்றுவதில் அவர்கள் இருவருக்கும் தான் அக்கறை இருந்திருக்க வேண்டும். ஆனால், ஒருவரையொருவர் வீழ்த்துவதில் கவனம் செலுத்துகின்றனர். குடும்ப சண்டை கட்சி சண்டையாகி, தேர்தல் களத்தில் வன்னியர் சமுதாய மோதலாக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராமதாஸ் குடும்பத்தினர் ஒரே தொகுதியில் நேருக்கு நேர் மோதினால், அங்கு வன்னியர் சமுதாயத்திற்கு உள்ளேயே மோதல் வெடிக்கலாம் என்பதை சமூக வலைதளங்களில் நடக்கும் சண்டை உறுதிப்படுத்துகிறது. இதனால், பா.ம.க.,வை நம்பி உழைத்த எங்களை போன்ற நிர்வாகிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சமுதாய நலன் கருதி இருவரும் சமரசமாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

