பணியின் போது இறக்கும் போலீசார் குடும்பத்திற்கு நிதி வழங்கும் சக காவலர்கள்
பணியின் போது இறக்கும் போலீசார் குடும்பத்திற்கு நிதி வழங்கும் சக காவலர்கள்
ADDED : நவ 25, 2025 06:47 AM

சென்னை: பணியின் போது இறக்கும் போலீசாரின் குடும்பத்திற்கு, சக காவலர்களே நிதியுதவி வழங்கி வருவது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
தமிழக காவல் துறையில், 2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்களில், 5,591 பேர் ஒன்றாக இணைந்து, 'உதவும் கரங்கள்' என்ற பெயரில், குழுவாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு மாவட்டங்களில், பல்வேறு பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
தங்களோடு பணியில் சேர்ந்தவர்களில் யாரேனும் பணியின் போது இறந்தால், அவர்களது குடும்பத்திற்கு நிதி திரட்டி உதவி செய்கின்றனர். சமீபத்தில், பணியின் போது இறந்த, சென்னையை சேர்ந்த ஏட்டு செல்லையா ஜெயகுமார் குடும்பத்திற்கு, 27.95 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
இச்சேவை குறித்து, உதவும் கரங்கள் காவலர்கள் கூறியதாவது:
எங்களுடன் பணியில் சேர்ந்தவர்கள் யாரேனும் இறந்து விட்டால், எங்களின் சிறு முயற்சியாக, ஒவ்வொருவரும் தலா, 500 ரூபாய் வழங்கி, சம்பந்தப்பட்டவரின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்து வருகிறோம்.
இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு நாங்கள் இருக்கிறோம் என, நம்பிக்கையூட்டும் வகையில், இந்த உதவியை செய்து வருகிறோம்.
இறந்த காவலரின் குழந்தைகள் பெயரில், மனைவி பெயரில், வங்கிகளில் வைப்புத்தொகையாக செலுத்தி, அதற்கான ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைக்கிறோம். இதுவரை, 91 பேரது குடும்பத்திற்கு, 24 கோடி ரூபாய் வரை நிதி வழங்கப்பட்டுள்ளது. எங்கள் குழுவின் பணி தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

