420 பயணியருடன் சென்ற விமானத்தில் மாரடைப்பால் பெண் பயணி உயிரிழப்பு சென்னையில் அவசர தரையிறக்கம்
420 பயணியருடன் சென்ற விமானத்தில் மாரடைப்பால் பெண் பயணி உயிரிழப்பு சென்னையில் அவசர தரையிறக்கம்
ADDED : நவ 06, 2025 03:07 AM
சென்னை: சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு, 420 பயணியருடன் சென்று கொண்டிருந்த சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், நேற்று மாலை ஜெட்டாவில் இருந்து, 420 பயணியருடன் புறப்பட்டு, இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவுக்கு சென்று கொண்டு இருந்தது.
கேப்டனுக்கு தகவல் விமானம், நடுவானில் 40,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது, அந்த விமானத்தில் பயணித்த, இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த டர்டியா ஸ்ரீனி நிஷா, 63, என்ற பெண் பயணிக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து, அந்தப் பெண் பயணியுடன் பயணித்துக் கொண்டிருந்த அவரின் மகன்கள் இருவர், அவசர உதவி கேட்டனர். விமான பணிப்பெண்கள், முதலுதவி சிகிச்சை அளித்ததோடு, விமான கேப்டனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, விமானத்தை அவசரமாக, ஏதாவது ஒரு விமான நிலையத்தில் தரை இறக்கி, பயணிக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க விமானி முடிவு செய்தார்.
இதையடுத்து, இந்திய வான்வெளியில் பறந்து கொண்டிருந்த விமானம், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டறைக்கு அவசரமாக தொடர்பு கொண்டு, மாலை 6:30 மணிக்கு தரையிறக்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்பெண் விமானத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்தார்.
பரிசோதனை இதையடுத்து, இறந்த பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, டில்லியில் உள்ள இந்தோனேஷியா நாட்டு துாதரகத்துக்கும் தகவல் தெரிவித்து, உயிரிழந்த பெண்ணின் உடலுடன், அவர்களின் இரண்டு மகன்களையும் இந்தோனேஷியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விமானம் 417 பயணியருடன், மாலை 7:40 மணிக்கு, சென்னையில் இருந்து ஜகார்த்தாவுக்கு புறப்பட்டு சென்றது.

