தி.மு.க., ஆட்சியில் நிதி மேலாண்மையும் சீரழிந்து வருகிறது: பன்னீர் குற்றச்சாட்டு
தி.மு.க., ஆட்சியில் நிதி மேலாண்மையும் சீரழிந்து வருகிறது: பன்னீர் குற்றச்சாட்டு
ADDED : டிச 12, 2024 08:17 PM
சென்னை:'ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், பொது மக்கள் மீது நிதிச் சுமையை ஏற்றியும், தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இதற்கு காரணம் திறமையற்ற ஆட்சி' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தின் கடன் சுமை குறைக்கப்படும். அரசு பொதுத்துறை நிறுவனங்கள் சீரமைக்கப்படும் என, தி.மு.க., அரசால் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தி.மு.க., ஆட்சி அமைந்து, 43 மாதங்கள் கடந்த நிலையில், தமிழகத்தின் நிதி நிலைமை அதலபாதாளத்திற்கு சென்று விட்டதாக. இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் கூறி உள்ளார். இதுதான் தி.மு.க., அரசின் சாதனை.
கடந்த 2018 - 19ம் ஆண்டில், 23,459 கோடி ரூபாயாக இருந்த, தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை, 2022 - 23ல் 36,215 கோடி ரூபாயாகவும், நிதி பற்றாக்குறை, 47,335 கோடி ரூபாயில் இருந்து, 81,886 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் மொத்தக் கடன் 8 லட்சத்து 33,362 கோடி ரூபாய்.
தமிழகத்தின் நிதி நிலைமை, இந்த நிலைமையில் இருக்கிறது என்றால், பொதுத்துறை நிறுவனங்களின் நிதி நிலைமை, இதை விட மோசமாக உள்ளது. கடந்த 2018 - 19ம் ஆண்டில், 24,718 கோடி ரூபாயாக இருந்த, அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொடர் இழப்பு, 2022ல் 48,478 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மாநில அரசின் வரம்புக்குள் வரும் அத்தனை வரிகளும் உயர்த்தப்பட்டன. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், பொது மக்கள் மீது நிதிச் சுமையை ஏற்படுத்தியும், தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இதற்கு காரணம் திறமையற்ற ஆட்சி. சட்டம் - ஒழுங்கு சீரழிவு, நீர் மேலாண்மை சீரழிவு என்ற வரிசையில், நிதி மேலாண்மையும் சீரழிந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலைமை மாற, ஒரே வழி ஆட்சி மாற்றம்தான். தி.மு.க., ஆட்சி அகற்றப்பட்டு, ஜெயலலிதா வகுத்து கொடுத்த ஆட்சி மீண்டும் மலரும் நாள் வெகு துாரத்தில் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

