பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கிடைத்தவை முற்கால சோழர் நாணயங்கள் அகழாய்வு இயக்குநர் தகவல்
பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கிடைத்தவை முற்கால சோழர் நாணயங்கள் அகழாய்வு இயக்குநர் தகவல்
ADDED : செப் 28, 2025 05:08 AM

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வில், முற்கால சோழர்களின் நாணயங்கள் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, அகழாய்வு பணிகள் நடந்துள்ளன.
இரண்டு கட்ட அகழாய் வில் , மிகப்பெரிய கோட்டை சுவரும், அதன் நடுவில் வாழ்விடமும் அடையாளப் படுத்தப்பட்டு உள்ளன. வாழ்விடம், தொடர்ச்சி யாக கட்டுமானங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததற்கான அடையாளங்களும் கிடைத்துள்ளன.
இங்கு முதல் கட்ட அகழாய்வில் கிடைத்த, கரிம மாதிரிகளின் காலக்கணிப்பு முடிவுகள், தற் போது வெளியாகி உள்ளன. அவை, பொ.யு.மு., 300க்கும் , பொ.யு.மு., 200க்கும் இடைப்பட்டதாக உள்ளன.
அதாவது, 2,300 ஆண்டு களுக்கு முன்பிருந்து, 1,700 ஆண்டுகள் வரை, அங்கு அரசனோ அல்லது வசதி படைத்தவரோ வாழ்ந்ததற்கான, அரண்மனை போன்ற கட்டுமானங்கள் இருந்ததற்கான சான்றாக உள்ளன. இது, வரலாற்றில் சங்க காலமாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தை உறுதி செய்யும் வகையில், இங்கு கிடைத்த நாணயங்களை சுத்தம் செய்து ஆவணப்படுத்திய போது, அவை, சங்க காலத்தை சேர்ந்தவை என்பது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து, பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குநர் தங்கதுரை கூறியதாவது:
பொற்பனைக்கோட்டையில் நடந்த இரண்டு கட்ட அகழாய்வில், ஆறு நாணயங்கள் கிடைத்தன. தற்போது, அவை சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்று, கங்கை சமவெளியை சேர்ந்த முத்திரைக்காசு. மற்றவை இரண்டு முற்கால சோழர் காசுகள். மற்றொன்று செப்பு முத்திரை காசு; அத்துடன், அடையாளம் காண முடியாத நிலையில், தெளிவற்ற காசுகள் இரண்டும் கிடைத்துள்ளன.
தெளிவற்ற காசின் ஒரு பக்கத்தில், சூரியன், யானை, டாரின், அறுகிளைச்சின்னம் போன்றவை உள்ளன. மறுபக்கம் சிதைந்துள்ளது. அதாவது, 'எச்2' எனும் அகழாய்வு குழியில், 72 செ.மீ., ஆழத்தில், 6.8 கிராம் எடையுள்ள செப்பு முத்திரைக்காசு கிடைத்துள்ளது.
இதில், சூரியன் உள்ளிட்ட முத்திரைகள் உள்ளன. இது, பொ.யு.மு., 100ஐ சேர்ந்தது. இது, கங்கை சமவெளியுடன், இப்பகுதி மக்கள் கொண்டிருந்த வணிக தொடர்பை விளக்குகிறது.
'சி 22' எனும் குழியில், 30 - 32 செ.மீ., ஆழத்தில் ஒன்றும், 'ஒய்டிடி29' எனும் குழியில், 22 - 30 செ.மீ., ஆழத்தில் ஒன்றும் என, இரண்டு செப்புக்காசுகள், 1.04 கிராம் எடையுடன் கிடைத்துள்ளன.
அவற்றின் ஒரு பக்கத்தில் யானை உருவம், மற்றொரு பக்கத்தில் புலி உருவம் உள்ளது. அதனால் இவை, முற்கால சோழர் காசுகள் என்பது உறுதியாகி உள்ளன.
அதாவது, சங்க காலத்தில், புதுக்கோட்டை வழியாக, நிறைய பெருவழிகள் சென்றுள்ளன. சிலப்பதிகாரத்தில், புதுக்கோட்டை பகுதியில் இருந்து மூன்று பெருவழிகள் பிரிந்து சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொற்பனைக்கோட்டை அருகில் உள்ள, திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவிலின், தென்புற சுவரில் உள்ள, முதலாம் பராந்தகன் கல்வெட்டில், 'தெற்கோடிய பெருவழி' இருந்ததற்கான குறிப்பு உள்ளது.
அதனால், இப்பகுதி வணிக நகரம் என்பதும், இங்கு கிடைத்துள்ள முற்கால சோழர் நாணயங்கள், கரிம மாதிரிகளின் முடிவுகளின்படி, சங்க காலத்தை சேர்ந்தவை என்பதும் உறுதியாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .