UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 10:47 PM
சென்னை: ‘தீபாவளி நாளில், காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் என, இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்கலாம்’ என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசு வெடிப்பது தொடர்பான வழக்குகளில், உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில், பட்டாசு வெடிப்பதற்கான வழிகாட்டுதல்களையும் பிறப்பித்துள்ளது. அதன்படி, கடந்த, 2018 முதல் காலையில் ஒரு மணி நேரம், இரவில், ஒரு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டும் தீபாவளியின் போது, காலை, 6:00 மணி முதல் 7:00 மணி வரை; இரவு, 7:00 மணி முதல், 8:00 மணி வரை மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும். எனவே, பொது மக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தும் பட்டாசுகளை மட்டுமே, வெடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
