உருக்காலையில் தீக்குழம்பு சிதறி விபத்து; ஒருவர் பலி 4 தொழிலாளர்கள் 'சீரியஸ்'
உருக்காலையில் தீக்குழம்பு சிதறி விபத்து; ஒருவர் பலி 4 தொழிலாளர்கள் 'சீரியஸ்'
ADDED : பிப் 11, 2025 05:38 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில், இரும்பு உருக்காலையில் தீக்குழம்பு சிதறியதில், வடமாநில தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தீக்காயமடைந்த நான்கு பேர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராம எல்லையில், சூர்யதேவ் அலாய்ஸ்' என்ற பெயரில் கட்டுமான இரும்பு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, பழைய இரும்பு கழிவுகளை உருக்கி, மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது.
உத்தரபிரதேசம், பீஹார், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து, ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
அந்த தொழிற்சாலையில், நேற்று காலை 7:00 மணிக்கு, கொதிகலனில் இருந்த இரும்பு தீக்குழம்பு வெளியே சிதறியது.
அங்கு பணியில் இருந்த, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாயல், 24, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்தர், 25, பாசில் ரகுமான், 28, பங்கஜ்குமார், 18, பிஹாட்ராம், 24, மற்றும் தில்காஷ், 18, ஆகிய ஆறு பேர் மீது தெறித்தது.
இதில், தில்காஷ் தவிர மற்ற ஐந்து பேரும், உடல் முழுதும் பலத்த தீக்காயம் அடைந்தனர். சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கிருந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி சாயல் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லேசான தீக்காயமடைந்த தில்காஷ், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த விபத்து குறித்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

