ADDED : நவ 07, 2026 06:21 PM
துாத்துக்குடி: விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர், தவறி விழுந்து உயிரிழந்தார்.
துாத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்த அந்தோணிராஜ், 56, சக மீனவர்களுடன் விசைப்படகில் நேற்று (நவ.,6) அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். இரவு அவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். கடற்கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் திடீரென பலத்த காற்று வீசியதால் படகு நிலை தடுமாறியது.
மீனவர் அந்தோணிராஜ் கடலுக்குள் தவறி விழுந்தார். சக மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகள் மூலம் அவரை தேடும் பணி நடந்தது. இதற்கிடையே, இன்று (நவ.,7) மீனவர் அந்தோணிராஜ் சடலமாக மீட்கப்பட்டார்.
மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அந்தோணிராஜ் கடலில் தவறி விழுந்ததும் உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோதிலும், அவர்கள் மீட்பு பணியில் முறையாக ஈடுபடவில்லை என, மீனவர்கள் குற்றம் சாட்டினர்.
